புனே, டெல்லி, கொல்கத்தா ஆராய்ச்சி மையங்களில் பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர்கள் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

0
270

பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர்களின் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.

மகாராஷ்டிராவின் புனேவில் அரசு நலத்திட்ட விழா நேற்று நடைபெறுவதாக இருந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று ரூ.20,900 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைப்பார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பலத்த மழை காரணமாக புனே அரசுநலத்திட்ட விழா ரத்து செய்யப்பட்டது. எனினும் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக சில முக்கிய திட்டங்களை தொடங்கிவைத்தார்.சூப்பர் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவை தற்சார்புடையதாக மாற்ற பிரதமர் நரேந்திர மோடி உறுதி பூண்டுள்ளார். இதன்படி தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் இயக்கத்தின் கீழ் உள்நாட்டிலேயே ரூ.130 கோடிமதிப்பில் 3 பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர்கள் உருவாக்கப்பட்டு புனே, டெல்லி மற்றும் கொல்கத்தாவில் உள்ள ஆராய்ச்சி மையங்களில் நிறுவப்பட்டுள்ளன. இந்த 3 சூப்பர் கம்ப்யூட்டர்களின் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.புனேவில் உள்ள ராட்சத மீட்டர் ரேடியோ தொலைநோக்கி (ஜிஎம்ஆர்டி) மையத்தில், ரேடியோ வெடிப்புகள் மற்றும் வானியல் நிகழ்வுகளை ஆராய பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர் பயன்படுத்தப்படும். டெல்லியில் உள்ள இன்டர் யுனிவர்சிட்டி ஆக்சிலரேட்டர் மையத்தில், அறிவியல் மற்றும் அணு இயற்பியல் துறைகளில் ஆராய்ச்சியை மேம்படுத்த பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர் பயன்படுத்தப்படும் கொல்கத்தாவில் உள்ள எஸ்.என்.போஸ் மையத்தில், இயற்பியல், அண்டவியல் மற்றும் புவி அறிவியல் போன்ற துறைகளில் மேம்பட்ட ஆராய்ச்சியை மேற்கொள்ள பரம் ருத்ரா சூப்பர்கம்ப்யூட்டர் பயன்படுத்தப்படும்.

வானிலை ஆராய்ச்சி: வானிலை, பருவநிலை ஆராய்ச்சிக்காக உயர் செயல்திறன் கொண்ட கணினி (எச்பிசி) அமைப்பை பிரதமர் மோடி நேற்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். புனேவில் உள்ள இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் (ஐ.ஐ.டி.எம்) மற்றும் நொய்டாவில் உள்ள நடுத்தர தொலைவு வானிலை முன்னறிவிப்புகளுக்கான தேசிய மையம் (என்.சி.எம்.ஆர்.டபிள்யூ.எஃப்) ஆகியவற்றில் எச்பிசி அமைப்பு நிறுவப்பட்டு உள்ளது. புதிய எச்பிசி அமைப்புகளுக்கு ‘அர்கா’ மற்றும் ‘அருணிகா’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது.இவற்றின் மூலம் வெப்பமண்டல சூறாவளிகள், அதிக மழைப்பொழிவு, இடியுடன் கூடிய மழை, ஆலங்கட்டி மழை, வெப்ப அலைகள், வறட்சி உள்ளிட்ட முக்கியமான வானிலை நிகழ்வுகளை முன்கூட்டியே துல்லியமாக கணிக்க முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here