டோக்கியோ: டோக்கியோவில் நடைபெற்ற ஜப்பான் பாரா பாட்மிண்டன் சர்வதேச போட்டியில் இந்தியாவுக்கு 24 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இப்போட்டிகள் நடைபெற்று வந்தன. நேற்று நிறைவுற்ற இப்போட்டியின் முடிவில் இந்திய அணி வீரர், வீராங்கனைகள் 24 பதக்கங்களை கைப்பற்றியுள்ளனர்.
6 தங்கம், 9 வெள்ளி, 9 வெண்கலப் பதக்கங்கள் இந்தியாவுக்கு கிடைத்துள்ளன. இந்திய வீரர் சிவராஜன் சோலைமலை ஒற்றையர் எச்எச்6 கிளாஸ் பிரிவில் தங்கம் வென்றார். இரட்டையர் பிரிவில் சிவராஜன், சுதர்சன் சரவணக்குமார் முத்துசாமி ஜோடி தங்கம் வென்றது.சுகந்த் கடம், ஆடவர் ஒற்றையர் (எஸ்எல்4) பிரிவில் தங்கமும், இரட்டையர் பிரிவில் (எஸ்எல்3-எஸ்எல்4) சுகந்த் கடம், தினேஷ் ராஜையா ஜோடி வெள்ளியும் வென்றது. மேலும், ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் நவீன் சிவக்குமார், சூர்யகாந்த் யாதவ் ஆகியோர் வெண்கலம் வென்றனர். ஆடவர் ஒற்றையர் எஸ்எல்3 பிரிவில் இந்திய வீரரும், நடப்புச் சாம்பியனுமான குமார் நிதேஷ், ஜப்பானின் டாய்சுகே புஜிஹராவை வீழ்த்தி தங்கம் வென்றார். மகளிர் பிரிவில் (எஸ்யு5) மணீஷா ராம்தாஸ் தங்கமும், நீரஜ் (எஸ்எல்3 பிரிவு) வெள்ளியும் வென்றனர்.














