மகளிர், அரசு ஊழியர், மாணாக்கர் என அனைவரும் முதல்வரின் திட்டங்களால் பயன்பெறுவதைப் பார்த்து பழனிசாமியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: பழனிசாமி ஆட்சியில் 2019-ம் ஆண்டிலேயே லேப்டாப் வழங்கும் திட்டத்தை நிறுத்திவிட்டு தொடர்ந்து வழங்கி வந்ததாக பொய் கூறுகிறார். அதிமுக ஆட்சியில் ரூ.68 கோடியில் வாங்கிய 55 ஆயிரம் லேப்டாப்கள் வீணடிக்கப்பட்டதை இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கை அறிக்கை (சிஏஜி) வெளிச்சம் போட்டுக் காட்டியது.
பழனிசாமி ஆட்சியில் நடந்த லேப்டாப் முறைகேட்டை அம்பலப்படுத்திய சிஏஜி அறிக்கை 2023 ஏப்ரலில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 2017-18-ம் ஆண்டு போட்டித் தேர்வுக்குத் தயாரான 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்க எல்காட் நிறுவனம் மூலம் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லேப்டாப்கள் கொள்முதல் செய்யப்பட்டன.
அதில் குறைந்த அளவிலான லேப்டாப்களை மட்டும் விநியோகித்துவிட்டு, 55 ஆயிரம் லேப்டாப்களை தேவைப்படும் மாணவர்களுக்கு வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அந்த லேப்டாப்களின் பேட்டரி வாரண்டி காலாவதி ஆகிவிட்டது. இதனால் ரூ.68.71 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சிஏஜி அறிக்கையின்படி, பழனிசாமி ஆட்சியில் 2017-18 முதல் 2020–21 வரை 11 மற்றும் 12-ம் வகுப்பில் 18.60 லட்சம் தகுதியான மாணவர்கள் இருந்தார்கள். ஆனால் 20 சதவீத மாணவர்களுக்கு வழங்காமல் புறக்கணித்தார்கள். 2017-18-ம் ஆண்டில் 12-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற 2.32 லட்சம் மாணவர்கள் பள்ளிப் படிப்பை முடிக்கும் வரை லேப்டாப்களை பெறவில்லை.
தற்போது 20 லட்சம் கல்லூரி மாணாக்கருக்கு லேப்டாப் வழங்கும் ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார். தமிழக மாணவர்கள் உலகத்தோடு போட்டியிடும் வகையில் ஒவ்வொரு திட்டமாக வகுத்து வருகிறது திமுக அரசு. மகளிர், அரசு ஊழியர், மாணாக்கர் என ஒவ்வொரு பிரிவினரும் முதல்வரின் திட்டங்களால் பயன்பெறுவதைப் பார்த்து பழனிசாமியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.







