Home தேசிய செய்திகள் உலக அரங்கில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்படும்: எம்.பி.க்கள் குழு கருத்து

உலக அரங்கில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்படும்: எம்.பி.க்கள் குழு கருத்து

0

உலக அரங்கில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்படும் என ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று வந்த அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழு தெரிவித்துள்ளது.

தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் செயல்பாட்டை விளக்கிக் கூறுவதற்காக அனைத்து கட்சி எம்.பி.க்கள் அடங்கிய 7 குழுக்களை மத்திய அரசு அமைத்தது. இக்குழுவினர் தனித்தனியாக பல்வேறு நாடுகளுக்கு சென்று இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்கினர்.

அந்த வகையில் பாஜக எம்.பி. ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான குழு 6 ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியது. இதுகுறித்து ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:

நாங்கள் பிரான்ஸ், இத்தாலி, டென்மார்க், இங்கிலாந்து, பிரஸல்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு சென்றிருந்தோம். அந்த நாடுகளின் நாடாளுமன்ற மூத்த தலைவர்கள், சிந்தனையாளர்கள், இந்தியர்கள் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினோம்.

பஹல்காம் தீவிரவாத தாக்குதல் நடத்தியவர்கள் மீது அவர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியதுடன் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கும் நாங்கள் சென்றிருந்தோம். இந்தியா, ஐரோப்பா இடையே புதிய உறவு அமையும். இந்த பயணம் திருப்திகரமாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

இக்குழுவில் இடம்பெற்றிருந்த சிவசேனா (உத்தவ்) எம்.பி. பிரியங்கா சதுர்வேதி கூறும்போது, “நாங்கள் 6 நாடுகளுக்கு சென்றிருந்தோம். அங்கு பத்திரிகையாளர்கள், சிந்தனையாளர்கள், அரசு அதிகாரிகள், அமைச்சர்களை சந்தித்துப் பேசினோம். ஜெர்மனி வெளியுறவு அமைச்சருடன் 30 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினோம். பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதத்தை எதிர்த்து மேற்கு ஐரோப்பிய நாடுகள் போராடுவதைப் போலவே இந்தியாவும் பல ஆண்டுகளாக போரிட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

தீவிரவாதமும் தீவிரவாதிகளும் எங்கிருந்து உருவாகின்றனர் என்பதை ஐரோப்பிய நாடுகள் தெரிந்து வைத்திருக்கின்றன. சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடன் எங்கு பதுங்கி இருந்தான் என்பதையும் அவர்கள் அறிவார்கள். எனவே, பாகிஸ்தான் உலக அரங்கில் தனிமைப்படுத்தப்படும். தீவிரவாதத்தை ஊக்குவிப்பது குறித்து பாகிஸ்தானிடம் கேள்வி கேட்போம் என ஐரோப்பிய ஒன்றியம் வாக்குறுதி அளித்துள்ளது” என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version