காவிரி நீர்ப் பகிர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே இறுதித் தீர்ப்பு அளித்துள்ள நிலையில், நீர் திறப்பது தொடர்பாக காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் தான் முடிவு எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
காவிரியில் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நீரில் பற்றாக்குறையாக உள்ள 11 டிஎம்சி தண்ணீரை திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. இந்நிலையில் அந்த வழக்கின் விரிவான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
காவிரி இறுதித் தீர்ப்பை செயல்படுத்துமாறு கடந்த 2018-ம் ஆண்டு மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இதன்படி, காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆகியவை அமைக்கப்பட்டன. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் இந்த இரு மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நீர் பங்கீட்டை ஒழுங்குபடுத்தும் பொறுப்பு இந்த இரண்டு அமைப்புகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நீரை திறப்பதற்கான அட்டவணையை கண்காணித்து அமல்படுத்த வேண்டிய பொறுப்பு இந்த 2 அமைப்புகளிடம் உள்ளது. நிபுணர்கள் அடங்கிய இந்த அமைப்புகள், நீர் விவகாரத்தில் முடிவு எடுத்து செயல்படுத்தி வரும் நிலையில் அதில் உச்ச நீதிமன்றம் தலையிடுவது பொருத்தமானதாக இருக்காது.
பற்றாக்குறை காலங்களில் நீரைப் பகிர்வது தொடர்பாக காவிரி ஒழுங்காற்றுக் குழுவும், காவிரி நீர் மேலாண்மை ஆணையம்தான் முடிவு எடுக்க வேண்டும், அதற்காகத்தான் இந்த அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. காவிரி நீர்ப் பகிர்வு விவகாரத்தில் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பு அளித்துள்ள நிலையில், எந்த ஒரு மாநிலத்துக்கும் தனி உத்தரவு பிறப்பிப்பது பொருத்தமானது என்று உச்ச நீதிமன்றம் கருதவில்லை. எனவே, இந்தப் பிரச்சினைகளை காவிரி ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
