டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பிப்ரவரி 2-ம் தேதி அதிகாலை இலங்கைக்கு புறப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் உலகக் கோப்பை தொடரையோ அல்லது இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தையோ பாகிஸ்தான் அணி புறக்கணிப்பதற்கு வாய்ப்பு இல்லை எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் பிப்ரவரி 7-ம் தேதி இந்தியா, இலங்கையில் தொடங்குகிறது. இதில் 20 அணிகள் கலந்துகொள்கின்றன. இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணி ‘ஏ’ பிரிவில் இடம் பெறுள்ளது. இதே பிரிவில் போட்டியை நடத்தும் நடப்பு சாம்பியனான இந்தியா, நமீபியா, நெதர்லாந்து, அமெரிக்கா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இதற்கிடையே ‘சி’ பிரிவில் இடம் பெற்ற வங்கதேச அணி பாதுகாப்பு காரணங்களை கருதி இந்தியாவில் வந்து விளையாட மறுத்தது. இதையடுத்து அந்த அணியை ஐசிசி அதிரடியாக நீக்கிவிட்டு ஸ்காட்லாந்து அணியை சேர்த்தது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வங்கதேச வாரியத்துக்கு ஆதரவான நிலைப்பபாட்டை எடுத்திருந்தது. இதன் காரணமாக டி 20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து தங்கள் நாட்டு பிரதமரிடம் ஆலோசனை கேட்போம்.
அரசு அனுமதித்தால் மட்டுமே டி 20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்போம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவார் மோஷின் நக்வி தெரிவித்திருந்தார். இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, “பிப்ரவரி 2-ம் தேதி அதிகாலையில் உலகக் கோப்பை அணி கொழும்புக்குப் புறப்படுவதற்கான பயண ஏற்பாடுகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே செய்துள்ளது.
பாகிஸ்தான் அணி உலகக் கோப்பை தொடர் முழுவதையும் இலங்கையில்தான் விளையாடுகிறது. எங்கள் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் அந்த ஆட்டமும் இலங்கையில்தான் நடைபெறும். எனவே எந்த அடிப்படையில் முழு தொடரையோ அல்லது இந்தியாவுக்கு எதிரான போட்டியையோ புறக்கணிக்க முடியும்?
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வி மற்றும் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் இடையேயான சந்திப்பின் போது, பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு நிலையான மற்றும் வளமான எதிர்காலத்தை உறுதி செய்யும் அனைத்து விஷயங்களையும் ஆராய்வதன் முக்கியத்துவத்தை நக்வி வலியுறுத்தினார். அதே நேரத்தில் ஐசிசி மற்றும் சக உறுப்பினர் வாரியங்களுடன் வலுவான உறவுகளை வளர்ப்பதையும் அவர் வலியுறுத்தினார்.
இந்திய அரசாங்கம் தனது அணி பாகிஸ்தானில் விளையாடுவதற்கு அனுமதிக்கவில்லை. ஆனால் ஆசிய கோப்பை அளவிலான போட்டிகளில் அல்லது நடுநிலையான இடங்களில் நடைபெறும் ஐசிசி போட்டிகளில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுவதற்கு எந்தத் தடையும் இல்லை.
விளையாட்டில் அரசியல் கலக்கக்கூடாது என்று பாகிஸ்தான் அரசாங்கம் எப்போதும் கூறி வரும் நிலையில், இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிப்பதை பாகிஸ்தான் எவ்வாறு நியாயப்படுத்தும்?” என்றார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரியின் இந்தத் தகவலால் அந்த அணி டி 20 உலகக் கோப்பையையோ அல்லது இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தையோ புறக்கணிக்க வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது.
வரும் 2027-ம் ஆண்டு வரை ஐசிசி தொடர்களில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டங்கள் பொதுவான இடத்தில் மட்டுமே நடத்தப்படும் என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இம்முறை டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி விளையாடும் அனைத்து ஆட்டங்களும் இலங்கையில் நடத்தப்படுகின்றன.



