பாகிஸ்தான் அணிக்கு மூளை இல்லை; என்ன செய்ய வேண்டுமென யாருக்கும் தெரியவில்லை – ஷோயிப் அக்தர்

0
209

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள போட்டியை நடத்தும் பாகிஸ்தான் தனது முதல் ஆட்டத்தில் 60 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்திடம் தோல்வி அடைந்த நிலையில், நேற்று முன்தினம் இந்திய அணி அணியிடமும் வீழ்ந்தது. இரு தோல்விகளால் பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது. இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி எந்த ஒரு கட்டத்திலும் போராடாமல் விளையாடிய விதம் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் செயல்பாடுகளை முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயிப் அக்தர் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர், எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி அடைந்த தோல்வியால் நான், ஏமாற்றமடையவில்லை, ஏனென்றால் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியும். ஐந்து பந்துவீச்சாளர்களை தேர்வு செய்ய முடியாதா? உலகில் உள்ள மற்ற அணிகள் 6 பந்துவீச்சாளர்களை கொண்டு விளையாடுகிறது… நீங்கள் இரண்டு ஆல்ரவுண்டர்களுடன் செல்கிறீர்கள். இது மூளையற்ற, தெளிவு இல்லாத அணி நிர்வாகத்தையே காட்டுகிறது.

நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன். பாகிஸ்தான் வீரர்களை குறை சொல்ல முடியாது. அணி நிர்வாகத்தைப் போலவே வீரர்களும் அறியாமையில் உள்ளனர். அவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. நோக்கம் என்பது வேறு விஷயம்.

பாகிஸ்தான் அணி வீரர்களிடம் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷுப்மன் கில் போன்றவர்களிடம் உள்ள திறமைகள் இல்லை. வீரர்களுக்கோ அல்லது நிர்வாகத்திற்கோ எதுவும் தெரியவில்லை. அவர்கள் எந்த தெளிவான வழிகாட்டுதல்லும் இல்லாமல் விளையாடச் சென்றுள்ளனர். என்ன செய்ய வேண்டும் என்று யாருக்கும் தெரியவில்லை.

பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு போட்டியில் விளையாட வேண்டும் என்று விராட் கோலியிடம் சொன்னால், அவர் தயாராக வருவார். பின்னர் சதம் அடிப்பார். அவருக்கு எனது வாழ்த்துகள். விராட் கோலி, ஒரு சூப்பர் ஸ்டார், நவீன காலத்தில் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இலக்கை துரத்துவதில் சிறந்தவர். நேர்மையான மனிதர். ஒருநாள் கிரிக்கெட்டில் 14 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி 100 சதங்களை எடுப்பார் என நம்புகிறேன். இவ்வாறு ஷோயிப் அக்தர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here