2026 டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதையடுத்து பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் இந்திய அணியை புகழ்ந்து தள்ளி வருகின்றனர். முன்னாள் கேப்டனும் லெக் ஸ்பின்னரும் அதிரடி பேட்டருமான ஷாஹித் அஃப்ரீடி 2011 உலகக்கோப்பை அரையிறுதியில் எப்படி தோனி படை தங்களை கடும் அழுத்தத்திற்குக் கொண்டு சென்றது என்பதைப் பகிர்ந்துள்ளார்.
பாகிஸ்தான் ஊடகமான சாம்னா டிவியில் அஃப்ரீடி இது தொடர்பாகக் கூறும்போது, மொஹாலி நினைவுகளை பகிர்ந்த ஷாஹித் அஃப்ரிடி – இந்திய ரசிகர்களின் ஆதரவு பாகிஸ்தான் வீரர்களை அழுத்தத்தில் ஆழ்த்தியது என்றார். தங்கள் பேட்டர்கள் சிலர் களமிறங்குவதற்குப் பயந்தார்கள், நடுங்கினார்கள் என்றார் ஷாகித் அஃப்ரீடி
“2011 உலகக்கோப்பையில் மொஹாலியில் அரையிறுதியில் இந்தியாவுடன் ஆடிய போட்டி இன்னமும் என் நினைவில் உள்ளது. நாங்கள் நல்ல தொடக்கம் கண்டோம். ஹபீசும் கம்ரன் அக்மலும் நன்றாக ஆடிவந்தனர். கேப்டனாக நான் மிகவும் ரிலாக்ஸாக இருந்தேன், எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என்று நம்பிக்கையுடன் இருந்தேன்.
ஆனால் முதல் விக்கெட் விழுந்தவுடனேயே இந்திய ரசிகர்கள் இந்திய அணிக்கு அளித்த ஏகோபித்த ஆதரவும் இந்திய அணியின் கேப்டன் தோனி தலைமையில் இந்திய அணி மீண்டெழுந்த விதமும் எங்களது சில பேட்டர்களை இறங்கும் போது நடுங்கச் செய்தது என்றே கூற வேண்டும். ஹபீஸ் ஆட்டமிழந்தவுடன் இந்த நடுக்கத்தையும் அழுத்தத்தையும் நான் கண்கூடாகக் கண்டேன்.
ஒவ்வொரு பந்து வீசும்போதும் இந்திய வீரர்களின் நம்பிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது. நாங்கள் கடும் அழுத்தத்திற்கு ஆளாக்கப்பட்டோம்.” என்றார் அஃப்ரீடி. இந்திய அணி முதலில் பேட் செய்து 260/9 என்று முடிந்தது. பாகிஸ்தான் 231 ரன்களுக்குச் சுருண்டது.
இந்திய அணியின் சமீபத்திய வெற்றியை பல முன்னாள் பாகிஸ்தான் வீரர்களும் பாராட்டியுள்ளனர். முன்னாள் பாகிஸ்தான் டெஸ்ட் கேப்டன் ஜாவேத் மியாண்டாத், “இந்திய கிரிக்கெட்டின் வலுவான உள்கட்டமைப்பு தான் இன்றைய வெற்றிகளுக்கு காரணம்” என்று தெரிவித்துள்ளார்.
“இந்திய அணியில் திறமையான பேட்ஸ்மேன்கள், ஸ்பின்னர்கள், வேகப்பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள். அது அவர்களுடைய திட்டமிட்ட மற்றும் கட்டமைப்புள்ள கிரிக்கெட் அமைப்பின் பலன்,” என்றும் கூறியுள்ளார்.
மேலும், “ஒரு அணியின் டிரெஸ்சிங் ரூமில் வெற்றிக்கான மனநிலை உருவானால் தொடர்ந்து கோப்பைகளை வெல்வது சாத்தியமாகும் என்றும், அதே சூழல் இருந்த காலத்தில் பாகிஸ்தான் அணியும் பல வெற்றிகளை பெற்றதாக” மியாண்டாட் குறிப்பிட்டார்.














