லாகூரில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 93 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், டி20, ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. முதலாவதாக டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
கடந்த 12-ம் தேதி லாகூர் கடாபி மைதானத்தில் முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 378 ரன்களும், தென் ஆப்பிரிக்க அணி 269 ரன்களும் எடுத்தன.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 109 ரன்கள் முன்னிலை பெற்ற பாகிஸ்தான், 2-வது இன்னிங்ஸில் 167 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதையடுத்து 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி தனது 2-வது இன்னிங்ஸை விளையாடியது. 3-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 3-ம் நாள் ஆட்டத்தை ரியான் ரிக்கெல்டன் 29 ரன்களுடனும், டோனி டி ஸோர்ஸி 16 ரன்களுடனும் தொடங்கினர். ஆனால் பாகிஸ்தான் வீரர்களின் சிறப்பான பந்துவீச்சால், தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட்கள் விரைவாக சரிந்தன.
ரியான் ரிக்கெல்டன் 45, டோனி டி ஸோர்ஸி 16, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 2, கைல் வெர்ரைன் 19, செனுரன் முத்துசாமி 6, சைமன் ஹார்மர் 14, பிரனலன் சுப்ராயன் 8, காகிசோ ரபாடா 0 ரன்கள் எடுத்தனர்.
டெவால்ட் பிரேவிஸ் மட்டும் சற்று தாக்குப்பிடித்து விளையாடி 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து தென் ஆப்பிரிக்க அணி 60.5 ஓவர்களில் 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 93 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் நோமன் அலி , ஷாஹீன் அப்ரிடி ஆகியோர் தலா 4 விக்கெட்களையும், சஜித் கான் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி: இதையடுத்து தென் ஆப்பிரிக்க அணியின் டெஸ்ட் தொடர் வெற்றிக்கு பாகிஸ்தான் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக தென் ஆப்பிரிக்கா தொடர்ச்சியாக 10 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
நோமன் அலி ஆட்டநாயகன்: 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 10 விக்கெட்களைக் கைப்பற்றிய பாகிஸ்தான் வீரர் நோமன் அலி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட்போட்டி, ராவல்பிண்டி மைதானத்தில் வரும் 20-ம் தேதி தொடங்கவுள்ளது.