பஹல்காம் தீவிரவாத தாக்குதல் விவகாரம்: மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது

0
101

பஹல்காம் தீவிரவாத தாக்குதல் விவகாரம் குறித்து ஆலோசிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக கடந்த 23-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

அப்போது, சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு, பாகிஸ்தானியருக்கான விசா ரத்து, அட்டாரி எல்லை மூடல், பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேற்றம், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் முப்படை ஆலோசகர்கள் பதவியிடங்கள் ரத்து ஆகிய 5 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து கடந்த 24-ம் தேதி தலைநகர் டெல்லியில் அனைத்து கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் கூட்டத்தில் உறுதி அளித்தன.

இந்த சூழலில் பஹல்காம் தீவிரவாத தாக்குதல் விவகாரம் குறித்து ஆலோசிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, ஜே.பி.நட்டா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள். இதில் அரசியல் சார்ந்த விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

இதன்பிறகு பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்பட்டிருப்பது, அட்டாரி எல்லை மூடல், பாகிஸ்தானியருக்கான விசா ரத்து, பாகிஸ்தானுடனான உறவு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here