பராசக்தி படத்தை இயக்கிய வகையில் தனக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கி ரூ. 8.39 கோடியை வழங்கக்கோரி இயக்குநர் சுதா கொங்கரா தொடர்ந்துள்ள வழக்கில், படத்தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா, அதர்வா, ரவி மோகன் நடித்துக் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம், ‘பராசக்தி’. ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்தைச் சுதா கொங்கரா இயக்கினார். அவருக்கு ரூ.15 கோடி சம்பளம் பேசப்பட்டு ஒப்பந்தம் செய்த நிலையில் ரூ.8.39 கோடியை வழங்காமல் பாக்கி வைத்துள்ளதாகவும், எனவே அந்த தொகையை வழங்குமாறு படத்தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவிடக் கோரி, சுதா கொங்கரா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
மேலும் அந்த மனுவில், “தனக்கான சம்பளப் பாக்கியை வழங்காமல், டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் அதர்வா நடித்துள்ள ‘இதயம் முரளி’ படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும். ‘பராசக்தி’ படத்தின் மூன்றாம் நபருக்கான உரிமையை வழங்கவும் தடை விதிக்க வேண்டும். ‘பராசக்தி’ படத்தை ஓடிடி மூலமாக வெளியிட்டதன் மூலம் கிடைத்த வருமானத்தின் முழு விவரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.குமரேஷ் பாபு, இது தொடர்பாக படத்தயாரிப்பு நிறுவனம் ஜூலை 8-க்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்துள்ளார்.
