சுகாதாரத் துறையில் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை, மருந்துகள் இருப்பு இல்லை என பழனிசாமி, சீமான் பொய் பிரச்சாரம் செய்வதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48’ திட்டத்தில் இதுவரை ரூ.261.46 கோடி செலவில் 3 லட்சம் பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இத்திட்டத்தின்கீழ் சிகிச்சை பெறும் 3 லட்சமாவது பயனாளியை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, மருத்துவ தேர்வு வாரியம் (எம்ஆர்பி), டிஎன்பிஎஸ்சி மூலம் உதவி மருத்துவர்கள், சுகாதார அலுவலர்கள் உட்பட 6,744 நிரந்தர பணியிடங்கள், தேசிய நலவாழ்வு குழுமம் சார்பில் செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உட்பட 11,716 பணியிடங்கள் என கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 18,460 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
ஆனால், சீமான் இதுபற்றி எந்த ஒரு தகவலும் தெரியாமல், 14 மருத்துவ கல்லூரிகளில் முதல்வர் பணியிடம் காலியாக இருப்பதாக கூறியுள்ளார். 14 கல்லூரி முதல்வர்கள் கடந்த 2-3 மாதங்களில் ஓய்வு பெற்றுள்ளனர். இதைத் தொடர்ந்து, 26 பேர் கொண்ட பட்டியல் தயாரித்து, 14 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு கடந்த அக்டோபர் 3-ம் தேதியே அவர்கள் பணியில் சேர்ந்துவிட்டனர். இதுகூட தெரியாமல், சீமான் தவறான தகவலை பரப்புகிறார். இவர் ‘அப்டேட்’ அரசியல்வாதியாக இருப்பார் என்று நினைத்தோம். ஆனால், காலாவதி அரசியல்வாதியாக இருக்கிறார்.
சுகாதாரத் துறையில் 2,553 மருத்துவர் பணியிடங்களை நிரப்ப 23,917 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து வருகிறது. இவர்களுக்கு 2025 ஜனவரி 27-ம் தேதி ஆன்லைனில் தேர்வு நடத்தப்பட உள்ளது. விதிகளின்படி, அனைத்து மருத்துவமனைகளிலும் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.
மருத்துவத் துறை 41 மாத காலமாக சீரழிகிறது என்று எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறியுள்ளார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 10,999 ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களிலும் அனைத்து விதமான உயிர் காக்கும் மருந்துகளும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் டெங்கு உயிரிழப்பு அதிகமாக இருக்கும். இந்த ஆண்டுதான் டெங்கு உயிரிழப்பு 8 என்ற அளவில் கட்டுக்குள் இருக்கிறது. இதுகூட தெரியாமல் அவர் அறிக்கை விடுவது ஏற்புடையது அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.