Home உலக செய்திகள் ஹார்முஸ் பாதுகாப்புச் செலவை பிற நாடுகள் அமெரிக்காவுக்கு தர வேண்டும்: ட்ரம்ப் கெடுபிடி

ஹார்முஸ் பாதுகாப்புச் செலவை பிற நாடுகள் அமெரிக்காவுக்கு தர வேண்டும்: ட்ரம்ப் கெடுபிடி

0

ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கும் மற்றும் எரிபொருள் விநியோகத்துக்கும் அமெரிக்கப் படைகள் வழங்கி வரும் பாதுகாப்புக்கான செலவை பயனடையும் பிற நாடுகள் திரும்பச் செலுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், அமெரிக்கா பல தலைமுறைகளாகத் தனது சொந்த நலனை விட பிற நாடுகளின் நலனுக்காகவே ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

“ஹார்முஸ் வழியே எண்ணெய் விநியோகம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த மோதல் நிலவரம் முடிந்த பிறகு, இதுவரை அமெரிக்காவுக்கு எந்த உதவியும் செய்யாத உலக நாடுகள் இந்த செலவுகளைத் திரும்பச் செலுத்த வேண்டும். ஈரானுடனான ராணுவ மோதல் விரைவில் முடிவுக்கு வரும், அதன் பிறகு எண்ணெய் விலையும் வேகமாகக் குறையும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும், ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக உள்ளதாகவும், அதற்கான தூதரக அளவிலான பேச்சுகளில் அமெரிக்கா பங்கேற்பதா வேண்டாமா என்பதை தான் முடிவு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹார்முஸ் பாதையைத் தவிர்க்கும் வகையில் சவுதி அரேபியா அமைத்திருந்த முக்கிய கச்சா எண்ணெய் குழாய்ப் பாதை ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக மூடப்பட்டதைத் தொடர்ந்து, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

பிரென்ட் கச்சா எண்ணெய்பேரல் ஒன்றுக்கு 105.34 டாலராகவும், அமெரிக்க டபிள்யூ.டி.ஐ கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 100.92 டாலராகவும் உயர்ந்துள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் எண்ணெய் விலை 9% வரை உயர்ந்துள்ள நிலையில், சவுதியின் இந்த நடவடிக்கை உலகளாவிய விநியோகத்தில் கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

ஹார்முஸ் பகுதியில் நிலவும் கப்பல் போக்குவரத்து சிக்கல்களைத் தீர்க்க சலாலா நகரில் ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெறவிருந்த ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஓமன் வெளியுறவு அமைச்சர் பத்ர் அல்புசைதி அறிவித்துள்ளார். அப்பகுதியில் தொடரும் தாக்குதல்கள் மற்றும் சவுதி எண்ணெய் குழாய் மீதான தாக்குதல் காரணமாகப் பாதுகாப்புச் சூழல் மோசமடைந்துள்ளதால், இந்தக் கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version