ஒடிசாவில் மூளைச்சாவு அடைந்த 16 மாதக் குழந்தையின் உறுப்புகள் தானம்: 2 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டது

0
211

ஒடிசாவில் மூளைச்சாவு அடைந்த 16 மாதக் குழந்தையின் உடல் உறுப்புகள் தானத்தால் 2 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டது.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி 16 மாதக் குழந்தையான ஜன்மேஷ் லேன்கா சேர்க்கப்பட்டார். தவறுதலாக அந்த குழந்தை, வாய் வழியாக விழுங்கிய பொருள் ஒன்று மூச்சுக்குழாயை அடைத்தது. இதனால் மூச்சுத்திணறலுடன் சேர்க்கப்பட்ட குழந்தைக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி கடந்த 1-ம் தேதி ஜன்மேஷ் லேன்கா மூளைச்சாவு அடைந்தான். இந்நிலையில், குழந்தையின் உறுப்புகளை தானம் செய்ய குழந்தையின் பெற்றோர் முன் வந்தனர்.

இதன்மூலம் குழந்தையின் கல்லீரல், சிறுநீரகங்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 2 குழந்தைகளுக்குப் பொருத்தப்பட்டன.

ஜன்மேஷ் லேன்காவின் உறுப்பு தானத்தால், 2 குழந்தைகள் உயிர் பெற்று தற்போது நலமாக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் குழு தெரிவித்துள்ளது.

இதன்மூலம், ஒடிசா மாநிலத்தின் மிகவும் இளம் வயதிலேயே உறுப்பு தானங்கள் செய்தவர் என்ற பெருமையை 16 மாதமேயான ஜன்மேஷ் லேன்கா பெற்றுள்ளான் என்று எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் பிரசாந்த் நாயக் தெரிவித்தார்.

ஜன்மேஷின் தந்தை, எய்ம்ஸ் மருத்துவமனை விடுதியில் வார்டனாக பணியாற்றி வருகிறார். உறுப்பு தானம் செய்த பிறகு, குழந்தை ஜன்மேஷின் உடலுக்கு டாக்டர்கள் குழுவினர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் குழந்தையின் உடல் தகனம் செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here