கிஷோர், டிடிஎஃப் வாசன், குஷிதா, அபிராமி, சிங்கம் புலி, ஹரிஷ் பெரேடி, ‘ஆடுகளம்’ நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ‘ஐபிஎல் -இந்தியன் பீனல் லா’.
கருணாநிதி இயக்கியுள்ள இப்படத்தை ராதா ஃபிலிம் இன்டர் நேஷனல் சார்பில் ஜி.ஆர்.மதன் குமார் தயாரித்துள்ளார். பிச்சு மணி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு அஸ்வின் விநாயக மூர்த்தி இசை அமைத்துள்ளார். நவ.28-ம் தேதி வெளியாகும் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இயக்குநர் கே.பாக்யராஜ் வெளியிட, படக்குழுவினருடன் இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி. உதயகுமார், பேரரசு இணைந்து பெற்றுக்கொண்டனர். விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ் பேசியதாவது: நடிகை ரேவதி முதன்முதலில் என்னுடைய ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ படத்தில் நடிப்பதற்காகத்தான் வந்தார். அவருடைய வயது கதாபாத்திரத்துக்கு பொருத்தமானதாக இல்லை. சிறிது காலம் காத்திருங்கள் என்று சொன்னேன்.
இந்த இடைவெளியில் எங்கள் இயக்குநர் பாரதிராஜா, ‘மண்வாசனை’ படத்தில் அவரை அறிமுகப்படுத்திவிட்டார். அடுத்த படத்தில் ரஞ்சனியை அறிமுகப்படுத்துவதற்காக போட்டோ ஷுட் நடத்தி காத்திருக்கச் சொன்னேன். அதற்குள் எங்கள் இயக்குநர் பாரதிராஜா ‘முதல் மரியாதை’யில் அறிமுகப்படுத்திவிட்டார். ‘அந்த 7 நாட்கள்’ படத்தில் நடித்த அம்பிகாவை அவருடைய தங்கை ராதாதான் அறிமுகப்படுத்தி வைத்தார்.
அப்போது அவரிடம் அடுத்த படம் ‘தூறல் நின்னு போச்சு’, கிராமத்து சப்ஜெக்ட். அதில் அறிமுகப்படுத்துகிறேன் என்று சொன்னேன். அதற்குள் எங்கள் இயக்குநர், அவரையும் நடிக்க வைத்தார். இப்படி நடிகைகளை அறிமுகப் படுத்தும் வாய்ப்பு தவறிக் கொண்டே இருந்தது. ஆனால் அனைவரும் சிறப்பான உயரத்துக்குச் சென்றார்கள். எங்களுடைய இயக்குநரின் ஆசி அப்படி.
நடிகை அபிராமி கதாநாயகியாக நடித்ததை விட, கதையின் நாயகியாக நடிக்கும் போது அவருடைய நடிப்பு சிறப்பாக இருக்கிறது. இப்போதுதான் அவர் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் கதை, உண்மை சம்பவத்தைத் தழுவி எழுதப்பட்டிருக்கிறது என்று இயக்குநர் சொன்னார். இது போன்ற கதைகளை மக்கள் எளிதாக அடையாளம் கண்டு, அதனுடன் தொடர்பு படுத்திக் கொள்வார்கள்” என்றார்.














