‘ஆபரேஷன் சிந்தூர்’ சர்ச்சை கருத்து: அசோகா பல்கலை. பேராசிரியர் கைது

0
136

“ஆபரேஷன் சிந்தூர்” தொடர்பாக சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்ட அசோகா பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறையின் தலைவர் அலி கான் மஹ்முதாபாத்தை ஹரியாணா போலீஸார் நேற்று கைது செய்தனர்.

பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இதனை, கும்பல் கொலை மற்றும் புல்டோசர்களை கொண்டு வீடுகள் இடிக்கப்படுவதுடன் ஒப்பிட்டு அசோக பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் அலிகான் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டிருந்தார்.

மேலும், பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்ததைப்போல வலதுசாரி கும்பலால் சிலர் அடித்துக் கொலை செய்யப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்திருந்தார். நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அலிகான் கருத்துகளை பதிவிட்டுள்ளதாக கூறி பாஜக இளைஞர் அணி சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில், வழக்குப்பதிவு செய்த ஹரியாணா போலீஸார் அலிகானை நேற்று கைது செய்தனர்.

இதுகுறித்து ஹரியாணா மாநில துணை ஏசிபி அஜீத் சிங் கூறுகையில், “அலிகான் மஹ்முதாபாத் டெல்லியில் உள்ள அவரது வீட்டிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை கைது செய்யப்பட்டார். தற்போது ஹரியாணாவில் உள்ள ராய் காவல் நிலைய சிறையில் உள்ளார். ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக அவர் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டதை உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ” என்றார்.

இதற்கிடையை, ஆபரேஷன் சிந்தூர் பதிவுகள் தொடர்பாக மகளிர் ஆணையமும் அலிகானுக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இருப்பினும் அவர் ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

ஹரியாணா மாநில மகளிர் ஆணைய தலைவர் ரேணு பாட்டியா கூறுகையில், “ பாகிஸ்தானுக்கு எதிராக தீரத்துடன் போராடிய கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் குறித்து பேராசிரியர் அலிகான் தெரிவித்த கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இதற்கு, அவர் மகளிர் ஆணையத்தின் முன் ஆஜராகி பகிரங்க மன்னிப்பு கோருவார் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.

அசோகா பல்கலை விளக்கம்: இதற்கிடையே பேராசிரியர் அலிகான் கருத்து அவரது சொந்த கருத்து. அதற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்திய ராணுவத்தின் தீரத்தை எண்ணி பெருமைப்படுவதாக அசோக பல்கலை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here