எதிர்க்கட்சிகளின் போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கும் காவல்துறை, ஆளுநருக்கு எதிராக திமுக நடத்தும் போராட்டத்துக்கு மட்டும் அனுமதி வழங்கியிருப்பதாக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: யாரையோ காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கில், அண்ணா பல்கலைக்கழக வளாக பாலியல் வன்கொடுமை வழக்கை திசைதிருப்பும் வகையில் திமுக அறிவித்து ஒரே நாளில் நடைபெறும் ஒரு நாடகப் போராட்டத்துக்கு போலீஸார் அனுமதியை வழங்கியிருப்பது எப்படி?
பாமக தலைவர் அன்புமணி: அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் பாமகவின் போராட்டத்துக்கு அனுமதி மறுத்து, பசுமைத் தாயகம் தலைவர் சவுமியா அன்புமணியை காரை விட்டுக்கூட இறங்க விடாமல் கைது செய்த காவல்துறையினர் திமுகவின் போராட்டத்துக்கு விண்ணப்பித்த சில நிமிடங்களில் அனுமதி அளித்தது. பல இடங்களில் விதிமீறல்கள் நடந்தாலும்கூட அதற்காக திமுகவினர் எவரும் கைது செய்யப்படவில்லை. தமிழக காவல்துறையின் இந்த அப்பட்டமான இரட்டை வேடம் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: திமுக ஆட்சியில், எதிர்க்கட்சிகளுக்கு ஜனநாயக ரீதியாகப் போராடுவதற்கு அனுமதி இல்லை. ஆனால் திமுகவின் வீண் போராட்டங்களுக்கு அனுமதி உண்டு. தமிழகம் முழுவதும் திமுகவினர் குற்றங்கள் செய்து கொண்டிருக்க, காவல்துறை சுவரொட்டி ஒட்டும் திமுகவினருக்குப் பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியில் தமிழகம், அறிவிக்கப்படாத அவசர நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. விரைவில் மக்கள் இந்த கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவுரை எழுதுவார்கள்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை திசை திருப்பவும், பட்டிதொட்டியெங்கும் பரவியிருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் தாராளப் புழக்கத்தால் கொலை, கொள்ளை உள்ளிட்ட சட்டம்- ஒழுங்கு சீர்கேடுகளை மூடி மறைக்கவுமே ஆளுநருக்கு எதிராக திமுக போராட்டத்தை நடத்தியிருக்கிறது. எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்துக்கு அனுமதி மறுத்து, கைது செய்த காவல்துறை திமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற திமுகவினரையும் கைது செய்யாதது ஏன்?
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா: எதிர்க்கட்சியினரின் குரல்வளையை நசுக்குகின்ற வகையில், இந்த ஆட்சிக்கு எதிராக யாரும் குரல் கொடுக்க கூடாது, விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது, பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்யக் கூடாது, அமைதி பேரணி நடத்தக் கூடாது, ஆனால் திமுகவுக்கு மட்டும் ஆர்ப்பாட்டம் நடத்த ஒரேநாளில் அனுமதி வழங்கியது வன்மையாக கண்டிக்க கூடிய விஷயம். திமுகவுக்கு ஒரு நியாயம், மற்ற கட்சிகளுக்கு ஒரு நியாயமா என்ற கேள்விக்கு திமுக அரசும், முதல்வரும் நிச்சயமாக பதில் சொல்ல வேண்டும். அறிவிக்கப்படாத அவசரநிலையாக திமுகவின் ஆட்சி இருக்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.














