பொதுமக்களின் வசதிக்காக பெயர் திருத்தம், பெயர் மாற்றத்துக்கான இணையவழி சேவை வரும் ஜூலை மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படும். தமிழறிஞர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று பேரவையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து, முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: பொதுமக்களிடம் இருந்து அரசிதழில் பெயர் திருத்தம், பெயர் மாற்றம் வெளியிடுதல் உள்ளிட்ட சேவைகளுக்கான விண்ணப்பங்கள், உரிய ஆவணங்கள், வெளியீட்டுக் கட்டணம் ஆகியவை இணையவழியில் பெறப்பட்டு, இணைய வழியிலேயே சரிபார்க்கப்பட்டு உரிய அதிகாரியால் ஆணை பிறப்பிக்கப்படும். முதன்முறையாக விரைவுத்துலங்கல் குறியீடு (QR Code) அங்கீகார வசதியுடன் அரசிதழில் வெளியிடப்படும். இதற்கான மென்பொருள், மின் ஆளுமை முகமை (TneGA) மூலம் உருவாக்கப்படும். இந்த சேவை வரும் ஜூலை மாதம் முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும்.
கோவையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் தமிழ்த்தாய் உருவச் சிலை நிறுவப்படும். தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.4,500-ல் இருந்து ரூ.7,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். அதுபோல அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை ரூ.3,500-ல் இருந்து ரூ.7,500 ஆகவும், எல்லைக் காவலர்களுக்கு ரூ.5,500-ல் இருந்து ரூ.7,500 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.
செயற்கை நுண்ணறிவு காலத்துக்கேற்ப தமிழ் மொழியை வளர்த்தெடுக்க தேவைப்படும் தமிழ்த் தரவக உருவாக்கம், சிறப்புக் கலை களஞ்சியங்கள் போன்ற திட்டப் பணிகளை தமிழ் வளர்ச்சிக் கழகம் மேற்கொள்ளவும் தொடர்ந்து தொய்வின்றி செயல்படவும் வைப்புத் தொகையாக ரூ.2 கோடி வழங்கப்படும். தமிழ்த் தென்றல் திரு.வி.கலியாண சுந்தரனாரைப் போற்றும் வகையில் அவர் பிறந்த இடமான துள்ளம் என்கிற துண்டலம் கிராமத்தில் ரூ.1 கோடியில் நினைவரங்கமும், மார்பளவு வெண்கல சிலையும் நிறுவி, அங்குள்ள நூலகமும் மேம்படுத்தப்படும்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பன்னோக்கு கலையரங்கம் அருகில் ரூ.50 லட்சத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும். சுதந்திரப் போராட்ட வீரரும் பன்மொழிப் புலவருமான க.ரா.ஜமதக்னிக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில் நினைவுத்தூண் நிறுவப்படும். சங்ககாலப் புலவர் குறமகள் இளவெயினிக்கு மதுரையில் ரூ.50 லட்சத்தில் சிலை நிறுவப்படும்.
கவிக்கோ அப்துல் ரகுமான் பிறந்த நாள் நவ.9 மற்றும் அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா பிறந்த நாள் ஜூலை 15 தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும். தவத்திரு குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழா சிவகங்கை மாவட்ட அளவிலும், இசை முரசு நாகூர் இ.எம்.அனிபா நூற்றாண்டு விழா நாகப்பட்டினம் மாவட்ட அளவிலும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.
புரட்சி்க் கவிஞர் பாரதிதாசன் நினைவாக விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அரங்கம் ரூ.3 கோடியில் அமைக்கப்படும். முன்னாள் எம்எல்ஏவும் குமரிக் கோமேதகம் என போற்றப்படுபவருமான ஆர்.பொன்னப்ப நாடார் நூற்றாண்டு நிறைவு பெறுவதையொட்டி அவருக்கு நாகர்கோவில் நகரில் ரூ.50 லட்சத்தில் உருவச் சிலை நிறுவப்படும்.
இதழியல் மற்றும் ஊடகவியல் கல்வி நிறுவனம் சென்னையில் இந்தக் கல்வியாண்டு முதல் தொடங்கப்படும். தென்னிந்திய திரைப்படங்களுக்கான ஓர் ஆவண மையமாக தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் கலைஞர் திரைக் கருவூலம் ரூ.3 கோடியில் அமைக்கப்படும். இவ்வாறு அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.














