கரூரில் கடந்த சனிக்கிழமை (செப்.27) அன்று தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மக்கள் உயிரிழந்தது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் 2-வது நாளாக இன்றும் (செப். 29-ம் தேதி) விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் இதுவரை 41 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. மேலும், 110 பேர் காயமடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த வேலுசாமிபுரம் வடிவேல் நகரைச் சேர்ந்த விமல் மகனான ஒன்றரை வயது குழந்தையின் வீட்டில் இன்று (செப்.29-ம் தேதி) காலை அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து கரூர் ஏமூர் புதூரை சேர்ந்த சக்திவேல் மனைவி பிரியதர்ஷினி (35), தரணிகா (14) உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரிடம் அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தினார்.
அதேபோல். கரூர் வடிவேல்நகர் போலீஸ் குடியிருப்பில் உள்ள காவலர் தேவேந்திரன் மனைவி சுகன்யா (33) கூட்டத்தில் உயிரிழந்த நிலையில் அவரது குடும்பத்தினரை சந்தித்து விசாரணை நடத்தினார். முன்னதாக, கரூர் வேலுசாமிபுரத்தில் கூட்டம் நடைபெற்ற இடம், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நேற்று அருணா ஜெகதீசன் விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.