‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மூலம் நிலையான அரசாங்கம் இருக்கும்: தமிழிசை நம்பிக்கை

0
139

அடிக்கடி தேர்தல் வந்தால் அது நல்லதல்ல., ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மூலம் நிலையான அரசாங்கம் இருக்கும் என்றும் தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று கூறியதாவது: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மூலம் தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தலாம். அது எந்த அளவுக்கு மக்களுக்கு பயன் தரும். இதன்மூலம் ஒரு நிலையான அரசாங்கம் இருக்கும்.

திட்டங்களை கொடுப்பதில் எந்தவொரு இடையூறும் இருக்காது என்பது உட்பட பல்வேறு கருத்துகளை முன்னெடுத்து செல்வதற்காக நாடு முழுவதும் கூட்டங்கள், கருத்தரங்குகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். இது பாஜக சார்பாக நடத்தப்படும் கூட்டம் அல்ல. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற தனிக்கருத்தை பரப்புவதற்கான கூட்டமாகும்.

அதன் ஒரு பகுதியாக சென்னை திருவான்மியூரில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்த கருத்தரங்கம் திங்கட்கிழமை (இன்று) நடைபெறுகிறது. இதில் ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அகில இந்திய பாஜக பொறுப்பாளர்கள் சுதாகர் ரெட்டி, அரவிந்த் மேனன், தேசிய செயலாளர் ஆண்டனி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை இந்தியா முழுவதும் ஏற்றுக்கொண்டால் நிச்சயமாக அது நாட்டுக்கு பலன் தரும். நாட்டின் பொருளாதாரம் மேம்படும்.

அடிக்கடி தேர்தல் வந்தால் அது நல்லதல்ல. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் வந்தால்தான் நல்லது. தமிழகத்தில் திமுக எதைக் கொடுத்து எப்படி ஓட்டுகளை வாங்குகிறார்கள் என்பதை பார்த்திருக்கிறேன். வெற்றி பெற்றவர்கள் எல்லோரும் திறமையாளர்கள் என்று சொல்லிவிட முடியாது.

தோல்வியடைந்தவர்கள் எல்லோரும் திறமையற்றவர்கள் என்று கூறிவிட முடியாது. தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் எல்லா விதத்திலும் தோல்வி அடைந்த அரசாக திமுக ஆட்சி இருக்கிறது. மக்கள் நிச்சயம் 2026-ல் பதிலளிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here