‘ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா’ மக்களவையில் இன்று தாக்கல்

0
187

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் இந்த மசோதாவை தாக்கல் செய்து பேசுகிறார்.

மக்களவை, மாநில சட்டப்பேரவைகள், மற்றும் மாநகராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இதுதொடர்பாக ஆய்வு நடத்தி மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்தது.

இந்தக் குழுவினர் பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் இந்தக் குழு தனது அறிக்கையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் தாக்கல் செய்தது.

இந்த அறிக்கையை, மத்திய அமைச்சரவை கடந்த செப்டம்பர் மாதம் ஏற்றுக் கொண்டது. இதைத் தொடர்ந்து, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பான சட்ட மசோதா தயாரிக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இந்த மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட இருந்தது. ஆனால், இந்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்படாது என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த மசோதா இன்று (டிசம்பர் 17) மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று தெரியவந்துள்ளது. மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இதைத் தாக்கல் செய்து அவையில் பேசவுள்ளார். இந்த மசோதா தாக்கல் செய்யப்படும்போது அவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இருக்கவேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. அவர்கள் தற்போது 3 நாள் பயணமாக சத்தீஸ்கர் சென்றுள்ளார்.

அவர் செவ்வாய்க்கிழமை டெல்லி திரும்புகிறார். அப்போது மத்திய அமைச்சர் அமித் ஷா அவை நடவடிக்கைகளில் பங்கேற்கிறார். இதைத் தொடர்ந்தே இன்று இந்த மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here