தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னை போன்ற பெரு நகரங்களில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
இதற்காக ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில் கடந்த 9-ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அரசுப் பேருந்துகளில் இடம் கிடைக்காதவர்கள் ஆம்னி பேருந்துகளை தேர்வு செய்வார்கள். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி சில ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர்.
சென்னையிலிருந்து மதுரை, கோவை, சேலம், திருச்சி, நெல்லை, நாகர்கோவில் போன்ற முக்கிய நகரங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ் கட்டணம் வழக்கத்தை விட 2 முதல் 3 மடங்கு வரை அதிகரித்துள்ளது.
ஜன. 13, 14 ஆகிய தேதிகளில் பெரும்பாலானோர் பயணிப்பார்கள் என்பதால் அந்த நாட்களில் சென்னையில் இருந்து கோவைக்கு படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகளில் ரூ.3 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு அதிகபட்ச கட்டணம் ரூ.2400 நிர்ணயிக்கப்பட்டுள்ள குறிப்பிடத்தக்கது.
அதேபோல நெல்லைக்கு அதிகபட்சமாக ரூ.2,700 நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், ரூ.3,200 முதல் 3,800 வரையும், மதுரைக்கு அதிகபட்சமாக ரூ.2,200 நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், ரூ.2,600 முதல் 3,200 வரையும், திருச்சிக்கு அதிகபட்சமாக ரூ.1,500 நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் ரூ.2,000 முதல் 3,200 வரையும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகளிடம் கேட்டபோது, “அதிக கட்டணம் குறித்து புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ஆம்னி பேருந்துகளில் சோதனை மேற்கொண்டு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டால், பேருந்துகளுக்கு அபராதம் விதித்து கூடுதல் கட்டணத் தொகை பயணிகளுக்கு திருப்பிக் கொடுக்கப்படும்” என்றனர்.

