“நிச்சயமாக நாங்களும் கூடுதல் இடங்களை கேட்போம்!” – தவாக தலைவர் தி.வேல்முருகன் நேர்காணல்

0
24

முதல்வருக்கு தெரியாமலேயே அவருக்குப் பக்கத்தில் இருக்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஆர்எஸ்எஸ் தொடர்புடன் விஜய்யை வளர்த்துவிட நினைக்கிறார்கள். முதல்வர் இதிலுள்ள சதியைப் புரிந்துகொண்டு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்றெல்லாம் விஜய்க்கு எதிராக வீரிய விமர்சனங்களை எடுத்துவைத்திருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் ‘இந்து தமிழ் திசைக்கு’ அளித்த பிரத்யேகப் பேட்டி.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்ச்சி எப்படி இருக்கிறது?

தினமும் தமிழகத்தின் பல முனைகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் எங்கள் கட்சியில் இணைந்து கொண்டு இருக்கிறார்கள். அப்படி கடந்த ஓர் ஆண்டில் மட்டும் ஒரு லட்சம் இளைஞர்கள் எங்கள் கட்சியில் இணைந்துள்ளனர்.

மக்களின் பிரச்சினைகளுக்காக போராட்டங்களை நடத்தும் நீங்கள் தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை குறித்து எந்தக் கருத்தும் சொல்வதில்லையே… ஏன்?

சட்டம் – ஒழுங்கு பிரச்சினை எந்த ஆட்சியாக இருந்தாலும் ஏற்படுவது இயல்புதான். ஆனால் அது, ஒரு அளவைத் தாண்டி போகக்கூடாது. சட்டம் – ஒழுங்கை கவனிக்க வேண்டிய இடத்தில் இருக்கும் உயரதிகாரிகளுக்கு இடையில் சில முரண்கள் உள்ளன. இதை களைவதற்கு முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திமுக அரசின் நான்கரை ஆண்டு கால ஆட்சி உங்களுக்கு திருப்தியா?

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் மக்களுக்கு எண்ணற்ற நலத் திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. ஆனால், அதை கடைக்கோடி மக்களுக்கு சேர்க்கும் இடத்தில் இருக்கும் அரசின் கீழ்மட்ட ஊழியர்கள் சிக்கலை ஏற்படுத்துகிறார்கள். அரசு இந்த சிக்கல்களை களைய வேண்டும். கடைக்கோடி மக்களுக்கும் நலத்திட்டங்கள் சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும்.

ஆனால், திமுக கொடுத்த பெரும்பாலான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவே இல்லை என்கிறாரே இபிஎஸ்..?

அவர் அரசியலுக்காக அப்படிக் கூறுகிறார். பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கொடுக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி இருக்கிறது திமுக அரசு.

தமிழகத்தில் வடஇந்தியர்களால் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துவிட்டதாகச் சொல்லி இருக்கிறீர்களே..?

போதை பொருட்களுக்கு வட இந்தியர்கள் அதிகமாக அடிமையாக உள்ளனர். கற்பழிப்பு, கொள்ளை, போலீஸாரை தாக்குவது போன்ற காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளில் வட இந்தியர்கள் ஈடுபடுகின்றனர். அவர்கள் எதற்காக இங்கு வருகிறார்கள்… வந்த வேலை முடிந்ததும் சொந்த மாநிலத்துக்குத் திரும்பிவிடுகிறார்களா என்பதை எல்லாம் கண்காணிக்க வேண்டும்.

தற்போது திமுக கூட்டணியில் இருக்கும் நீங்கள், 2026 தேர்தலில் கூடுதல் இடங்கள் கேட்டு திமுகவுக்கு அழுத்தம் கொடுப்பீர்களா?

நிச்சயமாக நாங்களும் 2026 தேர்தலில் கூடுதல் இடங்களைக் கேட்போம். கொடுக்க வேண்டிய இடத்தில் தமிழக முதல்வர் இருக்கிறார். கேட்டது கிடைக்காத பட்சத்தில், கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூடி அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்யும்.

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக மக்களை திமுக தூண்டுவதாக அண்ணாமலை சொல்லி இருப்பதைக் கவனித்தீர்களா..?

ஆளுநர் முதலில் ஆளுநராக செயல்பட்டால் பிரச்சினை வராது. ஆர்எஸ்எஸ் உறுப்பினர் போல் செயல்படுவதால், சமூக நீதியில் ஈடுபாடு கொண்டுள்ள கட்சிகளின் தலைவர்களாலும் முதல்வராலும் அவர் விமர்சனத்துக்கு உள்ளாகிறார்.

விஜய்க்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுவதாகச் சொல்லும் நீங்கள், போலீஸார் விஜய்யின் கூட்டத்துக்கு குறுகலான இடத்தை ஒதுக்கிக் கொடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளில் கோட்டைவிட்டதாக வரும் புகார்களுக்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்?

விஜய் கூட்டத்துக்காக போலீஸார் 7 இடங்களை குறித்துக் கொடுத்தனர். அதில் ஒரு இடத்தைத்தான் புஸ்ஸி ஆனந்த் தேர்வு செய்திருக்கிறார். அப்படி இருக்கையில் இப்போது பிரச்சினை என்றதும், இந்த இடத்தை ஒதுக்கித் தந்துவிட்டார்கள் என்று கூறுவது சரியல்ல. 10 ஆயிரம் பேர் வருவார்கள் எனச் சொன்னதால் அதற்கு ஏற்ப 500 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் எந்த சூழ்ச்சியோ சதியோ நடைபெறவிலலை.

விஜய் காலதாமதமாக வந்ததும், அவரைப் பார்க்க முண்டி அடித்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலும் தான் சம்பவத்துக்கு முக்கியக் காரணம். இதற்கு விஜய் தான் பொறுப்பேற்க வேண்டும். அதை விட்டுவிட்டு, முதல்வரை விமர்சிக்கும் விதமாகப் பேசி விஜய் வீடியோ வெளியிட்டது கண்டிக்கத்தக்கது.

கரூர் துயரச் சம்பவம் நடந்து பத்து நாட்களுக்கு மேலாகியும் இன்னும் விஜய் அங்கே செல்லவில்லையே?

அரசியல் என்பது மக்களுக்காகத்தான். மக்களை நேசிக்கணும், மக்களுடன் பழகணும், மக்களுடன் பணி செய்யணும், மக்களுடன் உரையாடணும், மக்களுடன் நெருக்கம் காட்டணும். அதை எல்லாம் விடுத்து, திரைக் கவர்ச்சி, திரை பிம்பத்தில் இருந்த மிகப்பெரிய கதாநாயகரான விஜய் கேரவனில் வருவது, ஓரிடத்தில் கையைக் காட்டுவது, தனி விமானத்தில் ஏறி வீட்டுக்குச் செல்வது எல்லாம் கூடாது.

மக்களுக்காக களத்தில் இறங்கி 15 ஆண்டுகள் பணி செய்யுங்கள். மக்களிடத்தில் படிப்பினையைக் கற்றுக்கொள்ளுங்கள். அதன்பிறகு மக்கள் ஏற்றுக்கொண்டால் அதிகார மையத்துக்கு வாருங்கள். இது எதுவுமே செய்யமாட்டேன். 2026-ல் முதலமைச்சர் இருக்கைக்குத் தான் வருவேன் என்ற அந்த பார்வை புரிதல் தவறானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here