மராட்டியத்தின் முக்கிய மன்னரான சம்பாஜி மகராஜ் குறித்து விக்கிப்பீடியாவில் ஆட்சேபனைக்குரிய வகையில் உள்ளடக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக கூறி விக்கிபீடியாவின் 4 ஆசிரியர்கள் மீது அம்மாநில சைபர் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: புகழ்பெற்ற மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி மகராஜின் மகன் சம்பாஜி மகராஜ். விக்கிபீடியாவில் இவரது வாழ்கை வரலாற்று பதிவில் ஆட்சேபனைக்குரிய சில உள்ளடக்கங்கள் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து, இதற்கு காரணமானவர்கள் என்ற வகையில் விக்கிப்பீடியாவைச் சேர்ந்த 4 ஆசிரியர்களுக்கு எதிராக மகாராஷ்டிர சைபர் குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது.
மேலும், கலிபோர்னியாவை சேர்ந்த விக்கிமீடியா பவுண்டேஷனுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுதான் ஆன்லைன் இலவச கலைக்களஞ்சியத்தை வழங்குகிறது. அந்த நோட்டீஸில் சம்பாஜி மகராஜ் தொடர்பான ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கத்தை நீக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு தானியங்கி மூலம் பதில் வந்துள்ளது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வாறு தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
            

