ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க கோரி சத்துணவு ஊழியர் ஏப்.24-ம் தேதி போராட்டம்

0
210

ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கக்கோரி சென்னையில் வரும் 24-ம் தேதி முற்றுகை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ந.நாராயணன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசுத் துறையில் உள்ள சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியரின் முதுமை கால வாழ்வாதாரம் கருதி, சமூக பாதுகாப்புத் திட்ட சிறப்பு ஓய்வூதியத்தை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிமுகம் செய்து வைத்தார். ஆனால், இன்றைய சூழலில் அந்த சிறப்பு ஓய்வூதியமான ரூ.2 ஆயிரம் கால் வயிற்று பசிக்குக்கூட உதவவில்லை. ஓய்வூதியத்தை உயர்த்தக் கோரி நீண்ட காலமாக தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் போராடி வருகிறது.

கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் சத்துணவு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் முறைப்படுத்தப்படும் என திமுக அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் கடந்த நிலையிலும், தனது அரசின் கடைசி பட்ஜெட் அறிவிப்பிலும்கூட எங்களது கோரிக்கை குறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறாதது வேதனைக்குரியது. இதே அரசுதான் வருவாய் கிராம உதவியாளருக்கு ரூ.5,500, கோயில் பூசாரிக்கு ரூ.4 ஆயிரம், காவல்துறை மோப்ப நாய்க்கு ரூ.10 ஆயிரம் ஓய்வூதியமாக வழங்கியிருக்கிறது.

ஆனால், சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியருக்கு ‘கலைஞர் உரிமைத் தொகை’ கூட தரக்கூடாது என உத்தரவிட்டிருக்கிறது. தனது தேர்தல் வாக்குறுதியைகூட நிறைவேற்றாத தமிழக அரசின் வஞ்சக அணுகுமுறையை வன்மையாக கண்டிக்கிறோம். எனவே, சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு ஓய்வூதியமாக ரூ.6,750 உயர்த்தி வழங்கக் கோரி வரும் ஏப்.24-ம் தேதி சென்னை காமராஜர் சாலையில் உள்ள சமூக நல ஆணையரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here