செவிலியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: மத்திய, மாநில அரசுகளுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

0
121

உலக செவிலியர் தினம் திங்கள்கிழமை (மே 12) கொண்டாடப்படும் நிலையில், செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: உலகம் முழுவதும் மே 12-ம் தேதி செவிலியர் தினம் கொண்டாடப்படுவது மகிழ்ச்சிக்குரியது. செவிலியர்கள் மருத்துவமனைகளில் இன்றியமையாத ஊழியர்களாக நோயாளிகளையும், வீடுகளில், ஆதரவற்ற விடுதிகளில் குழந்தைகளையும், முதியோரையும் அன்பாக, ஆதரவாக, கவனித்துக்கொள்ளும் பணி போற்றுதலுக்குரியது.

மருத்துவ உதவி தேவைப்படுவோருக்கு செவிலியர்கள் உணர்வுப்பூர்வமாக பணியாற்றுவது பாராட்டத்தக்கது. சாதாரண மருத்துவ சேவையை, போர்க்கால மருத்து சேவையை சாதி மதம் பார்க்காமல் சகிப்புத் தன்மையுடன் மேற்கொள்வதே செவிலியர்களின் மகத்தான பணியாகும்.

குறிப்பாக, செவிலியர்கள் கற்ற கல்வியால், அறிவால், அனுபவத்தால், மனித நேயத்தால் சமுதாயத்தில் ஓர் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள். மொத்தத்தில் செவிலியர்கள் வசதி படைத்தவர்களுக்கும், வறியவர்களுக்கும், இயலாதவர்களுக்கும் செய்யும் சேவைப்பணியும், தொண்டுள்ளமும் மதிக்கத்தக்கது, வணங்கத்தக்கது. எனவே, பொது மக்களுக்கான மருத்துவப்பணியில் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டுள்ள, சமுதாயத்தில் மதிப்புமிக்கவர்களான செவிலியர்களுக்கு நாங்கள் துணை நிற்போம்.

செவிலியர்களும், அவர்களின் குடும்பங்களும் முன்னேறி, வாழ்வில் சிறந்து விளங்கி, அவர்களின் மருத்துவ உதவியும், சேவைப்பணியும் தொடர வேண்டும்.

செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும். தமிழகம் உட்பட உலகின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள செவிலியர் அனைவருக்கும் செவிலியர் தின வாழ்த்துகள். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here