பிஹாரில் சுதந்திர போராட்ட தியாகியின் பிறந்த நாள் விழாவில் அவரது மகனுக்கு உரிய மரியாதை தரவில்லை என்றும் ராகுல் காந்தியை சந்திக்க அனுமதிக்கவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.
பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த ஜக்லால் சவுத்ரி சுதந்திரப் போராட்ட தியாகிகளில் குறிப்பிடத்தக்கவர் ஆவார். தலித் தலைவரான இவர், பெண்கள் உரிமை, தலித் மேம்பாடு உள்ளிட்ட சமூக சீர்திருத்தங்களுக்கு குரல் கொடுத்துள்ளார். தொண்டு நிறுவனம் சார்பில் இவருடைய பிறந்தநாள் விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்றார்.
இந்நிலையில், தனது தந்தையின் பிறந்தநாள் விழாவில் தனக்கு உரிய மரியாதை வழங்கவில்லை என ஜக்லால் சவுத்ரியின் மகன் புதியோ சவுத்ரி குற்றம்சாட்டி உள்ளார். மேலும் ராகுல் காந்தியை சந்திக்கவும் தன்னை அனுமதிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிஹார் மாநில காங்கிரஸ் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங் கூறும்போது, “ஜக்லால் சவுத்ரியின் பிறந்தநாள் விழாவில் அவரது மகனுக்கு உரிய மரியாதை வழங்கவில்லை என புகார் எழுந்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது. அதேநேரம் இந்த விழாவுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனம்தான் ஏற்பாடு செய்திருந்தது. பிஹார் காங்கிரஸுக்கு இதில் எந்த பங்கும் இல்லை. எனினும், எங்கள் கட்சி அலுவலகத்தில் புதியோ சவுத்ரியை சந்தித்துப் பேச உள்ளேன்” என்றார்.
இதுகுறித்து பிஹார் பாஜக மூத்த தலைவர் நீரஜ் குமார் கூறும்போது, “தலித்கள் மீதான காங்கிரஸாரின் உண்மையான முகம் இந்த சம்பவம் மூலம் வெளிப்பட்டுவிட்டது” என்றார்.
முன்னதாக, இந்நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசும்போது, “அரசு மற்றும் தனியார் துறையில் தலித்கள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் கடைநிலை வீரர்களாக மட்டுமல்லாமல் தலைவர்களாக மாறும் நாளைக் காண விரும்புகிறேன்” என்றார்.














