மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வழக்கமாக ஜூன் 10-ம் தேதி வாக்கில் பருவமழை தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு 13 நாட்கள் தாமதமாக செவ்வாய்க்கிழமை பருவமழை தொடங்கியது. அன்று இரவு முழுவதும் கனமழை பெய்தது. நேற்று காலையிலும் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. மும்பை மற்றும் தானே, ராய்கட், பால்கர் மற்றும் சிந்துதுர்க் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 300 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
இந்நிலையில், மும்பை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) நேற்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்தது. மும்பை முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்ததால், தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து சாலைப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
வாகனங்கள் தண்ணீரில் நீந்தியபடியே சென்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்தேரி சுரங்கப்பாதை, தாதர், குர்லா ஆகிய இடங்களில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் ஆங்காங்கே ஸ்தம்பித்து நிற்கின்றன.
இதுபோல தண்டவாளங்களில் நீர் தேங்கியதால் மத்திய மற்றும் மேற்கு வழித்தட புறநகர் ரயில்கள் 20 நிமிடங்களுக்கும் மேலாகத் தாமதமாக இயக்கப்படுகின்றன. இதனால் அலுவலகம் செல்லும் லட்சக் கணக்கான பணியாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு மும்பையின் விக்ரோலி மேற்குப் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றின் அருகே இருந்த தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது. நேற்று காலையில் மத்திய மற்றும் மேற்கு புறநகர் ரயில் பாதைகள் சந்திக்கும் முக்கிய சந்திப்பான தாதர் ரயில் நிலையம் நீரில் மூழ்கியது. கனமழையின்போது பலத்த காற்று வீசியதால் தாதர் பகுதியில் கார் ஒன்றின் மீது மரம் விழுந்ததில் அது சேதமடைந்தது.
அருணாச்சலில் மேகவெடிப்பு
அருணாச்சல பிரதேசத்தின் லோயர் சுபன்சிரி மற்றும் கீயி பன்யோர் ஆகிய மாவட்டங்களில் மேகவெடிப்பு ஏற்பட்டு அதி தீவிர கனமழை பெய்தது. இதனால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அப்பகுதி கிராமங்களை தண்ணீர் முழுவதுமாக சூழ்ந்துகொண்டது.
இந்த திடீர் வெள்ளத்தில் ஏராளமான வீடுகளும், விவசாய நிலங்களும் சேதமடைந்ததுடன், முக்கிய நெடுஞ்சாலைப் பாலங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. வரும் நாட்களிலும் சில பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் வெள்ள அபாயம் நீடிக்கும் என ஐஎம்டி எச்சரிக்கை விடுத்துள்ளது.
