நொய்டா ஜேவார் சர்வதேச விமானநிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 28) தொடங்கி வைக்கவுள்ளார். டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு துணையாகச் செயல்படும் வகையில் டெல்லி – என்சிஆர் பிராந்தியத்துக்கான 2-வது சர்வதேச விமான நிலையமாக நொய்டா ஜேவார் விமான நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியா, ஒரு உலகளாவிய விமானப் போக்குவரத்து மையமாக உருவெடுக்கும் பயணத்தில் இந்தத் திறப்பு விழா ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லாக அமையும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி புறநகர் பகுதியான நொய்டாவில், ஆசியாவிலேயே மிகப்பெரியதாக சர்வதேச விமான நிலையமாக நொய்டா ஜேவார் உருவாகியுள்ளது. இது ஐரோப்பாவின் நுழைவு வாயிலாக விளங்கப் போகிறது என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இந்த சர்வதேச விமான நிலையம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்போது ஆண்டுக்கு 7 கோடி பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாக இருக்கும். தொழில் துறையினரைப் பெருமளவில் ஈர்க்கும் விதமாக, விமான நிலையத்தைச் சுற்றி தொழில் மற்றும் தளவாடங்களை மையமாகக் கொண்ட தொகுப்புகள் (கிளஸ்டர்கள்) உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த நவீன விமான நிலையத்தின் முதல் முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கவுள்ளார். இதற்காக இன்று காலை உத்தரபிரதேசம் வருகிறார் பிரதமர் மோடி. காலை 11.30 மணியளவில் கவுதம புத்தநகர் மாவட்டத்தில் உள்ள ஜேவார் பகுதியில் அமைந்துள்ள நொய்டா சர்வதேச விமான நிலையத்தின் முனையக் கட்டிடத்தை அவர் பார்வையிடுவார்.
அதைத் தொடர்ந்து பகல் 12 மணியளவில் நொய்டா விமான நிலையத்தின் முதல் கட்டிடத்தைத் திறந்துவைத்து அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் உரையாற்றவுள்ளார்.














