“என்னை சோதிக்காதீர்கள்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வேதனைக் குரல் எழுப்பி இருக்கும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சரான ஓ.எஸ்.மணியனிடம் செங்கோட்டையன் விவகாரம் குறித்து பேசினோம்.
செங்கோட்டையன் அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறதே? – அண்ணன் செங்கோட்டையன் ஆதங்கத்தில் இருக்கிறார், வருத்தத்தில் இருக்கிறார், கோபத்தில் இருக்கிறார் என்பதற்கெல்லாம் அவரே நேற்று முன்தினம் தெளிவாக பதில் கூறி விட்டார். “இந்த இயக்கம் நன்றாக இருக்க வேண்டும், வலுவாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது எண்ணம்” என்று அவர் தெளிவாகச் சொன்ன பிறகும் அதைப் பற்றி பேசுவதற்கு வேறு எதுவும் இல்லை.
என்னை சோதிக்காதீர்கள் என்கிறாரே… யாரைச் சொல்கிறார்? – என்னிடமிருந்து எதையாவது வார்த்தைகளை வாங்கி எதையாவது செய்துவிடலாம் என்று நினைக்காதீர்கள், அப்படியெல்லாம் என்னை சோதிக்காதீர்கள் என்கிற அர்த்தத்தில் தான் அப்படிச் சொன்னார்.
விழா மேடையில் எம்ஜிஆர் ஜெயலலிதா படங்கள் இல்லையே என்று அவர் கேட்டது நியாயம் தானே? – தன்னிடம் அழைப்பு கொடுக்க வந்த விவசாய சங்க நிர்வாகிகளிடம் தானே அதை கூறி உள்ளார். அதை கட்சியில் பெரிதுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை.
விழாவுக்கு செல்லாததற்கான காரணமே அதுதான் என்றல்லவா அவர் சொல்லி இருக்கிறார்? – அது விவசாய சங்க கூட்டமைப்பினர் நடத்திய விழா. அதில் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி படங்களை வைப்பது குறித்து முடிவெடுக்க அவர்களுக்கு உரிமை உண்டு. அதேசமயம், அவர்களின் படங்களை வைக்க வேண்டும் என்பது சட்டம் இல்லை. அது கட்சி விழா அல்ல. அதனால் அவர்கள் படம் வைக்காததால் கலந்து கொள்ளவில்லை என்று சொன்னது விவசாய சங்கத்தினரின் விழாவைத் தானே தவிர கட்சி விழாவை அல்ல.
மறுநாள் நடந்த டெல்லி அதிமுக அலுவலகம் திறப்பு விழாவுக்கும் அவர் செல்லவில்லையே? – அவர் போகாததற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும். அவர் ஒரு பெரிய அரசியல்வாதி. தினமும் பல நல்லது, கெட்டதுகளில் கலந்து கொள்ள வேண்டி இருக்கும். எனவே அவர் போகாததற்கு வேறு முக்கிய காரணங்கள் இருக்கும். அதிருப்திதான் காரணம் என்று சொல்லமுடியாது.
அண்ணன் செங்கோட்டையன் அதிமுக-வின் மூத்த முதுபெரும் தலைவர். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அரி ஓம் என்று அரசியலுக்கு வந்த காலத்தில் இருந்து இன்று வரை அதிமுக-வில் தொடர்ந்து பயணிப்பவர். அதனால் அவருக்கு யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டியதும் இல்லை; அவரைக் குறை சொல்லவும் முடியாது.
அவரிடம் இருந்த தலைமை நிலைய செயலாளர் பதவியை எஸ்.பி. வேலுமணியிடம் கொடுத்தார் பழனிசாமி. அதிமுக கள ஆய்வு குழுவில் செங்கோட்டையனை சேர்க்கவில்லை. இதெல்லாம் அவரை புறக்கணிப்பதுபோல் இருக்கிறதே? – ஈரோடு மாவட்டத்தின் மொத்த பொறுப்பாளருமே அவர்தான். அதை கவனிக்கவே அவருக்கு நேரம் போதாது. நான் அதிமுக-வில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தேன். புரொட்டோகால் படி ஐந்தாவது இடத்தில் இருந்தேன். ஆனால் அதற்குப் பிறகு அம்மா என்னை பொறுப்பில் இருந்து நீக்கினார்கள். பிறகு சேர்த்தார்கள். மாவட்ட செயலாளர் பதவி கொடுத்தார்கள்.
எம்எல்ஏ சீட் கொடுத்து மந்திரியும் ஆக்கினார்கள். ஆனால் ஐந்தாவது இடத்தில் இருந்த என்னை 13-வது இடத்தில் வைத்தார்கள். அதற்காக அம்மாவை கோபித்துக் கொள்ள இயலுமா? ஆனால், செங்கோட்டையன் விஷயத்தில் அப்படி எதுவும் இல்லை. எடப்பாடியார் தலைமைக் கழகத்தில் நடக்கும் எந்த ஒரு தனி ஆய்வையும் செங்கோட்டையனை விட்டுவிட்டு நடத்தியதே கிடையாது.
வருத்தத்தில் இருக்கும் செங்கோட்டையன் வேறு ஏதேனும் முடிவுகள் எடுக்க வாய்ப்பு உள்ளதா? – அப்படியெல்லாம் எதுவும் இல்லை. அவர் நேற்று முன்தினமே அதற்கெல்லாம் விளக்கமாக பதில் அளித்துவிட்டார். அவர் தவறாக எந்த முடிவும் எடுக்கமாட்டார்; அப்படி எடுக்கும் ஆளும் அவர் இல்லை.














