தமிழகம் முழுவதும் வீட்டுவசதி வாரியத்திடம் பெற்ற வீட்டு மனைகளுக்கு தடையில்லாச் சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி கூறியதாவது: விருகம்பாக்கம் தொகுதி 136-வது வார்டில் அரசு அலுவலர் வாடகை குடியிருப்பு கட்டப்பட்டது. அது சேதமடைந்ததால் தற்போது இடிக்கப்பட்டுவிட்டது. அந்த இடம் அரசு புறம்போக்கு என குறிப்பிடப்பட்டுள்ளது. சிஎம்டிஏவில் குடியிருப்பு பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. 2013-ல் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படும் என ஒரு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, அப்பகுதியில் புதிய வணிக வளாகம் கட்டுவது கேள்விக்குறிதான். இருப்பினும், ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே வாடகைக்கு குடியிருப்பவர்கள் அதை சொந்தமாக்கிக் கொள்ள விரும்பினால், அதற்கான வழிமுறைகளை பின்பற்றி, சட்டச் சிக்கல் வராத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
வாரியத்திடம் வீட்டுமனை பெற்றவர்களுக்கு தடையில்லாச் சான்று வழங்கப்படாதது, கடந்த 40 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் இருக்கும் பிரச்சினை. இதை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். அதற்கு முதல்வர், ‘‘சிறு தவறும் நேராத வகையில், எல்லோருக்கும் ஒரேமாதிரியாக தீர்வு காண வேண்டும்’’ என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு துணை முதல்வர் உதயநிதியிடம் அறிவுறுத்தியுள்ளார். அதன்பிறகு, 2 முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு நவம்பர் இறுதியில் வழங்க உள்ள அறிக்கையின் பரிந்துரைப்படி, மனை உரிமையாளர்களுக்கு தடையில்லாச் சான்று வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.