‘நீதித் துறையில் ஊழல் இல்லை என யாரும் மறுக்க முடியாது; அதேபோல நீதிபதிகளை புனிதர்களாகச் சித்தரிக்க வேண்டிய அவசியமும் இல்லை’ என்று கருப்பு படத்துக்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
‘நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா, நடிகை த்ரிஷா நடித்து சமீபத்தில் வெளிவந்துள்ள ‘கருப்பு’ திரைப்படத்தில் நீதித் துறையையும், நீதிபதிகளையும் அவமதிக்கும் வகையில் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளதால் அப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும்’ எனக் கோரி கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.எஸ்.தமிழ்வேந்தன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: ‘கருப்பு’ திரைப்படத்தின் கதைக்களம் முழுக்க, முழுக்க நீதித்துறையின் செயல்பாடுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
அப்படத்தில் வரும் நீதிபதி ஊழல்வாதியாகவும், செல்வாக்குமிக்க வழக்கறிஞர் நீதிமன்ற நடைமுறைகளில் அதீத அதிகாரம் செலுத்தும் மையப்புள்ளியாக திகழ்வதாகவும் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
நீதித்துறையில் ஊழல் இல்லை என்று யாரும் இங்கு மறுக்க முடியாது. ஊழல் நீதிபதிகள் நேற்றும் இருந்தார்கள். இன்றும் இருக்கிறார்கள். அதேபோல், நீதிபதிகளை புனிதர்களாகச் சித்தரிக்க வேண்டிய அவசியமும் இல்லை.
நாட்டில் உள்ள 20 சதவீத நீதிபதிகள் ஊழல்வாதிகள் என்பதை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பருச்சா கேரளாவில் நடைபெற்ற ஒரு சட்ட கருத்தரங்கில் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.
மும்பை உயர் நீதிமன்றம் தொடர்பான ஒரு வழக்கில், ஊழல் என்னும் புற்றுநோய் செல்கள் நீதித்துறையின் உயிர் நாடிகளுக்குள் தொடர்ந்து ஊடுருவி வருவதாக உச்ச நீதிமன்றமும் கருத்து தெரிவித்துள்ளது.
நீதித்துறை அந்த அபாயகரமான செல்களை அறுவை சிகிச்சையின் மூலம் வேரோடு களைய வேண்டும் என்றும், சீர்திருத்த நடவடிக்கைகள் மூலமாக நீதித்துறை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய அவசியம் குறித்தும் உச்ச நீதிமன்றம் அந்த தீ்ர்ப்பில் எடுத்துரைத்துள்ளது.
வழக்கறிஞர்கள் சிலர் ஊழல் வாதிகளுடன் தொடர்பு கொள்ளாமல் நீதித்துறையில் ஊழல் நடைபெற வாய்ப்பு கிடையாது. நீதித்துறையில் நடைபெறும் ஊழல் நிகழ்வுகளை நாங்களும் அறிவோம். அதேநேரம் அந்த கூற்றை முழுமையாக ஆதரிக்க மாட்டோம்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் முழு நீதிபதிகள் அமர்வு அவ்வப்போது இதுபோன்ற கருப்பு ஆடுகளை களையெடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. ‘கருப்பு’ திரைப்படத்தில் வரும் காட்சிகள் மிகைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளன என்பது உண்மைதான் என்றாலும், அதை முழுவதுமாக மறுக்க முடியவில்லை.
கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்தும் சுதந்திரம், படைப்பாளியான திரைப்பட கலைஞர்களுக்கும் பொருந்தும். தனது அதீத கற்பனையால் அரசியல் ரீதியாக கருத்து சித்திரம் வெளியிடும் ஒரு கார்ட்டூனிஸ்டுக்கு என்ன பரந்த உரிமை உள்ளதோ அதே உரிமை திரைப்படக் கலைஞர்களுக்கும் உள்ளது.
‘கருப்பு’ திரைப்படத்துக்கு தணிக்கை வாரியமே சான்று அளித்திருக்கும்போது, நீதிமன்றம் அதன் கருத்தை மாற்றியமைக்க முடியாது. நாம் இப்போது சமூக ஊடகங்களின் யுகத்தில் இருக்கிறோம். யார் வேண்டுமென்றாலும் எதையும் சொல்லி எளிதாக தப்பிவிடலாம். கூற்று கொஞ்சம் கொடூரமானதாக இருந்தாலும் அதை புறக்கணித்து நீதித்துறையின் பயணம் முன்னோக்கிச் செல்ல வேண்டும்.
இந்தப் படத்தில் ஏழுகிணறு நீதிமன்றம் என கற்பனையாக சித்தரிக்கப்பட்டு அங்கு ஊழல் நடக்கிறது என படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதேயன்றி, ஒட்டுமொத்த நீதித்துறையையும் அந்தப்படம் கேள்விக்குறியாக்கவில்லை.
மேலும் ஏழுகிணறு நீதிமன்றம் என்ற பெயரில் சென்னையில் எந்த நீதிமன்றமும் இல்லை என்பதால் இந்த வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு இருப்பதாகக் கருதி படத்தின் இயக்குநர் மீதும், படத்தில் நடித்த நடிகர்கள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. இவ்வாறு உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர்.
