நித்திரவிளை அருகே தெருவு முக்கு பகுதியை சேர்ந்தவர் மாதவன்பிள்ளை மகன் மனு (27). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் தூத்தூரை சேர்ந்த பிராங்கிளின் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன்பிடித் தொழிலுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (4-ம் தேதி) ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மனு இறந்துள்ளார்.
இதையடுத்து சக தொழிலாளர்கள் விசைப்படகை கேரள மாநிலம் அழிக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் கரை ஒதுக்கி, மனுவின் உடலை கண்ணூர் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்துள்ளனர். தொடர்ந்து மனு இறந்த தகவலை உடன் சென்ற தொழிலாளிகள் உறவினர்களுக்கு தெரிவித்துள்ளனர். மனுவின் உறவினர்கள் கண்ணூர் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி சென்று அங்கிருந்து பிரேத பரிசோதனை முடிந்து உடலை இன்று ( 8-ம் தேதி) அதிகாலை ஊருக்கு கொண்டு வந்தனர்.