அல்-காய்தா தீவிரவாத அமைப்புக்கு நிதியுதவி வழங்கிய விவகாரம் தொடர்பாக கர்நாடகா உட்பட 6 மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர்.
அண்டை நாடான வங்கதேசத்தில் செயல்படும் அல்-காய்தா தீவிரவாதிகள் இந்தியாவில் கால் ஊன்ற முயற்சி மேற்கொள்வதாகவும், அல்-காய்தாவுக்காக இந்தியாவில் நிதி திரட்டி வருவதாகவும் உளவுத் துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடகா, மேற்குவங்கம், பிஹார், திரிபுரா, அசாம், காஷ்மீர் ஆகிய 6 மாநிலங்களை சேர்ந்த 9 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அப்போது சந்தேக நபர்களிடம் இருந்து செல்போன்கள், லேப்டாப், கணினி மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இதுகுறித்து என்ஐஏ வட்டாரங்கள் கூறியதாவது: வங்கதேசத்தை சேர்ந்த அல்-காய்தா தீவிரவாதிகள் இந்திய இளைஞர்களை இழுக்க தீவிர முயற்சி செய்து வருகின்றனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அல்-காய்தாவுக்காக நிதி திரட்டி வருகின்றனர்.
இதுதொடர்பாக கடந்த 2023-ம் ஆண்டில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் 12 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 4 பேர் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் ஆவர். தற்போது மீண்டும் வங்கதேசத்தில் இருந்து அல்-காய்தா தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே நாடு முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளோம்.
கடந்த திங்கள்கிழமை கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் சோதனை நடத்தினோம். பிஹாரில் சீவான் நகரை சேர்ந்த பழ வியாபாரி அக்தர் அலியின் வீடு, கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் இருந்து அக்தர் அலியின் வங்கிக் கணக்குகளுக்கு பணப் பரிமாற்றம் நடைபெற்றிருக்கிறது. இதில் அல்-காய்தா தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கிறோம். அவரது வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. ஆவணங்களை சரிபார்த்த பிறகு அக்தர் அலியும் அவரது 2 மகன்களும் கைது செய்யப்படலாம். இவ்வாறு என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்தன.
அமலாக்கத் துறை சோதனை: வங்கதேசம், இந்தியாவை சேர்ந்த சில தனிநபர்கள், நிறுவனங்கள் இடையே சட்டவிரோதமாக பணப் பரிமாற்றங்கள் நடைபெற்று இருப்பதாக உளவுத் துறை தகவல் தெரிவித்திருக்கிறது. இதன்பேரில் மேற்குவங்கம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் சுமார் 17 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
இதுகுறித்து அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறும்போது, “ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடத்தப்பட்ட சோதனையின்போது வங்கதேசத்தை சேர்ந்த 3 பெண்கள் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேற்குவங்கத்தை சேர்ந்த ஏஜெண்ட் மூலம் இவர்கள் ஜார்க்கண்ட் மாநிலத்துக்குள் நுழைந்து உள்ளனர். இவர்களது பணப் பரிமாற்றம், பின்னணி குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தன.