பாஜக நிர்வாகி கொலை வழக்கில் சென்னை உட்பட 16 இடங்களில் என்ஐஏ சோதனை

0
176

கர்நாடகாவில் பாஜக நிர்வாகி பிரவீன் நெட்டூரு கொல்லப்பட்ட வழக்கில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய 3 மாநிலங்களில் உள்ள 16 இடங்களில் நேற்று சோதனை மேற்கொண்டனர்.

கர்நாடகா மாநிலம் தக்ஷின கன்னடா மாவட்ட பாஜக இளைஞர் அணி செயலாளர் பிரவீன் நெட்டூரு (28). கடந்த 2022-ம் ஆண்டு மர்ம நபர்களால் அடித்துக் கொல்லப்பட்டார். இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய குற்றவாளிகள் 6 பேர் தலைமறைவாக உள்ளனர்.

இந்நிலையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய 3 மாநிலங்களில் உள்ள 16 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். கர்நாடகாவில் பெங்களூரு, மைசூரு, குடகு, மங்களூரு உட்பட 12 இடங்களில் இந்த சோதனை நடந்தது. இதில் 40‍க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல தமிழகத்தில் சென்னை, கோவை ஆகிய இடங்களிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். கேரளாவில் எர்ணாகுளம், மலப்புரம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்த போது, ”பிரவீன் நெட்டூரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 14 பேரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் இந்த 16 இடங்களும் சோதனைக்கு தேர்வு செய்யப்பட்டன.

இன்னும் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகள் 6 பேரை பிடிக்கும் முயற்சிகள் தீவிரமாக நடந்துவருகிறது. இந்த 6 பேரில் சிலர் வெளிநாட்டுக்கு தப்பியோடியதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அவர்களை சர்வதேச போலீஸாரின் உதவியுடன் பிடிக்க முயற்சித்து வருகிறோம்”என தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here