பிரதமர் மோடியுடன் நியூஸி. பிரதமர் கிறிஸ்டோபர் ஆலோசனை: தீவிரவாதத்தை எதிர்த்து போரிடுவதில் இணைந்து செயல்படுவதாக அறிவிப்பு

0
124

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லுக்சன் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது தீவிரவாதத்தை எதிர்த்து போரிடுவதில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லுக்சன் 5 நாள் பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்தார். பின்னர் அவர் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற ‘ரைசினா டயலாக்’ நிகழ்ச்சியில் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார்.

இதனிடையே, கிறிஸ்டோபர் லுக்சன் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது பாதுகாப்பு, கல்வி, வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவை பலப்படுத்துவது, பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தக விரிவாக்கம் மற்றும் பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் இருதரப்பு பிரதிநிதிகள் முன்னிலையில் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இரு நாடுகளுக்கிடையிலான தாராள வர்த்தக ஒப்பந்தம் (எப்டிஏ) தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த சந்திப்பின்போது, பாதுகாப்பு துறையில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது தொடர்பான ஒரு முக்கிய ஒப்பந்தம் உட்பட பல ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இந்த சந்திப்புக்குப் பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:

இந்த ஆண்டு ரைசினா டயலாக் நிகழ்ச்சியில் இளமையான, துடிப்பான தலைவரான கிறிஸ்டோபர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இருதரப்பு உறவை பலப்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினோம். குறிப்பாக, பாதுகாப்புத் துறை தொடர்பான ஒத்துழைப்பை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பான ஒப்பந்தத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டது.

கடந்த 2019-ல் நியூசிலாந்து தேவாலயம் மீது நடத்தப்பட்ட தாக்குதலாக இருந்தாலும் அல்லது 2008-ம் ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலாக இருந்தாலும் எதையுமே ஏற்றுக் கொள்ள முடியாது. தீவிரவாத அமைப்புகள் மீதும் அவற்றுக்கு ஆதரவு அளிப்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். எனவே, தீவிரவாதம், பிரிவினைவாதம் ஆகியவற்றுக்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து செயல்படும்.

நியூசிலாந்தில் சட்டவிரோத அமைப்புகள் இந்தியாவுக்கு எதிரான செயலில் ஈடுபடுவது குறித்து கிறிஸ்டோபரிடம் கவலை தெரிவித்தேன். இத்தகைய செயலில் ஈடுபடுவோர் மீது நியூசிலாந்து அரசு கடும் நவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here