இலங்கை அணிக்கு எதிரான இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2-வது ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை நியூஸிலாந்து அணி 2-0 என தன்வசப்படுத்தியது.
ஹாமில்டன் நகரில் நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டி மழை காரணமாக 37 ஓவர்களை கொண்டதாக நடத்தப்பட்டது. முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 37 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 255 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 63 பந்துகளில், ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 79 ரன்களும், மார்க் சாப்மேன் 52 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 62 ரன்களும் விளாசினர். இலங்கை அணி தரப்பில் தீக்சனா 4, வனிந்து ஹசரங்கா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
256 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இலங்கை அணி 30.2 ஓவர்களில் 142 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 64 ரன்கள் சேர்த்தார். அவிஷ்கா பெர்னாண்டோ 10, ஜனித் லியானகே 22, ஷமிந்து விக்ரமசிங்கே 17 ரன்கள் எடுத்தனர். மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் இரட்டை இலக்க ரன்னை எட்டவில்லை. நியூஸிலாந்து அணி தரப்பில் வில் ஓ’ரூர்க் 3, ஜேக்கப் டஃபி 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 2-0 என கைப்பற்றியது. முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. கடைசி மற்றும் 3-வது ஆட்டம் வரும் 11-ம் தேதி ஆக்லாந்தில் நடைபெறுகிறது.














