ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று காலை 11 மணிக்கு ‘டி’ பிரிவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்து – கனடா அணிகள் மோதுகின்றன. நியூஸிலாந்து அணிக்கு இது கடைசி லீக் ஆட்டம் ஆகும்.
அந்த அணி தனது முதல் 2 ஆட்டங்களில் ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரக அணிகளை வீழ்த்தியிருந்தது. இந்த 2 ஆட்டங்களும் சேப்பாக்கம் மைதானத்தில்தான் நடைபெற்றிருந்தது. தொடர்ந்து தனது 3-வது ஆட்டத்தை அகமதாபாத்தில் விளையாடிய நியூஸிலாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வி கண்டிருந்தது.
இந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியின் பலவீனங்கள் வெளிப்பட்டிருந்தது. பவர்பிளேவில் விக்கெட்களை பறிகொடுப்பது அந்த அணியின் உத்வேகத்தை குறைப்பதாக உள்ளது. இது நடுவரிசை பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தை உருவாக்குவதாக உள்ளது. டாப் ஆர்டரில் ஆல்ரவுண்டரானரச்சின் ரவீந்திராவின் பார்ம் கவலை அளிக்கும் வகையில் உள்ளது.
இது ஒருபுறம் இருக்க சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால் இன்றைய ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றாக வேண்டும் என்ற சூழ்நிலை உள்ளது. 3 ஆட்டங்களில் விளையாடி உள்ள நியூஸிலாந்து அணி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று தனது பிரிவில் 2-வது இடத்தில் உள்ளது.
இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் நியூஸிலாந்து அணி சூப்பர் 8 சுற்றில் கால்பதிப்பதில் எந்தவித பிரச்சினையும் இருக்காது. அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளரான லாக்கி பெர்குசன், தனது முதல் குழந்தை பிறப்பையொட்டி தாயகம் சென்றுள்ளார். இதனால் இன்றைய ஆட்டத்தில் அவருக்கு பதிலாக கைல் ஜேமிசன் அல்லது இஷ் சோதி களமிறங்கக்கூடும்.
கனடா அணி 2 ஆட்டங்களில் விளையாடி இரண்டிலும் தோல்வி கண்டுள்ளது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 57 ரன்கள்வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்த கனடா அணி, ஐக்கிய அரபு அமீரகத்திடம் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்ந்திருந்தது.
உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் விதத்தில் கனடா அணிக்கு பெரிய அளவிலான போட்டிகள் அமையவில்லை. இது அவர்களுடைய செயல்திறனில் தெளிவாக தெரிகிறது. மேலும் அவர்கள், துணைக் கண்ட நிலைமைகளுக்கு ஏற்ப தங்களது ஆட்டத்தை மாற்றிக்கொள்வதும் கடினமாக உள்ளது.
ஜிம்பாப்வே – அயர்லாந்து
இலங்கையின் கண்டி நகரில் உள்ள பல்லேகலே மைதானத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு ‘பி’ பிரிவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே – அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. ஜிம்பாப்வே அணி விளையாடிய இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.
அந்த அணி முதல் ஆட்டத்தில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஓமன் அணியையும், 2-வது ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலியாவை 23 ரன்கள் வித்தியாசத்திலும் தோற்கடித்து இருந்தது.இன்றைய ஆட்டத்தில் அந்த அணி வெற்றி பெறும் பட்சத்தில் முதன் முறையாக சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவதை உறுதிப்படுதிக் கொள்ளும்.
அயர்லாந்து அணி 3 ஆட்டங்களில் விளையாடி 2 தோல்வி, ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு இது கடைசி லீக் ஆட்டம்ஆகும். இதனால் தொடரை வெற்றியுடன் நிறைவு செய்வதில் அந்த அணி தீவிரம் காட்டக்கூடும்.
இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் ‘சி’ பிரிவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து – நேபாளம் அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணி களுமே சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டன.














