பாஜக தேசிய தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டாவின் 3 ஆண்டு பதவிக் காலம் கடந்த ஜனவரியுடன் முடிவடைந்தது. எனினும் மக்களவை தேர்தல் காரணமாக அவரது பதவிக் காலம் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இதுவும் கடந்த ஜுன் 30-ல் முடிவடைந்த நிலையில் அவர் பாஜக தேசிய தலைவராக தொடர்கிறார்.
இந்நிலையில் நாடு முழுவதிலும் மண்டலத் தலைவர்கள், பிறகு பாதி மாநிலங்களில் தலைவர் பதவிக்கான தேர்தலை பாஜக நடத்த உள்ளது. இவை வரும் ஜனவரி 15-ம் தேதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக கட்சி சார்பில் தேசிய பார்வையாளர்களை ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார். இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் லட்சத் தீவுகளுக்கு பார்வையாளராக தேசிய செயலாளர் தருண் சக் நியமிக்கப்பட்டார். அவருக்கு உதவியாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எம்எல்ஏ வானதி சீனிவாசன், நளின் கட்டீல் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். ஜனவரியில் இந்த தேர்தலுக்கு பிறகு பாஜகவுக்கு புதிய தேசிய தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார்.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் பாஜக தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, “எங்கள் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் ஒப்புதலுடன்தான் தேசிய தலைவரை நியமிப்பது வழக்கம். இதுவரை கட்சியின் முக்கியத் தலைவர்கள் பரிந்துரைத்த பெயர்களை ஆர்எஸ்எஸ் ஏற்கவில்லை. இதனால் புதிய தலைவரை அமர்த்துதல் தொடர்ந்து தள்ளிப் போகிறது. பாஜக நிர்வாகிகள் தேர்தல் நடத்தாமல் இருப்பது குறித்து மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி சமீபத்தில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து விட்டார். எனவே விரைவில் புதிய தலைவர் அமர்த்தப்படுவார்” என்று தெரிவித்தனர்.
தேசிய தலைவர் பதவிக்கு பாஜக தரப்பில் உ.பி. தேர்தல் பொறுப்பாளர் சுனில் பன்சல், தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே, முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் உள்ளிட்ட சிலரது பெயர்கள் பரிசீலிக்கப்படுகின்றன.














