‘புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் அமலாவதால் ஏற்கெனவே மத்திய, மாநில அரசுகளால் செயல் படுத்தப்படும் தொழிலாளர் நலத்திட்டங்கள் ரத்து செய்யப்படாது’ என மத்திய தொழிலாளர் துறை விளக்கம் அளித்துள்ளது.
புதிய ‘தொழிலாளர் சட்டத் தொகுப்புகள்’ அமல்படுத்தப்படு வதால் ஏற்கெனவே அமலில் உள்ள தொழிலாளர் நல வாரியங்களும், நலத்திட்டங்களும் ரத்து செய்யப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
இதற்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகத்தின் செயலர் சஞ்சய் திவாரி வெளியிட்ட விளக்கத்தில் கூறியிருப்பதாவது: தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் அமல்படுத்தப்பட்ட பின்பும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் தற்போதைய சமூக பாதுகாப்புத் திட்டங்கள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.
இதுதவிர அமைப்புசாரா தொழிலாளர்களின் பல்வேறு பிரிவினருக்கான மாநில அரசுகளின் தற்போதைய நலத்திட்டங்களும் தொடரும். அதேபோல், மாநிலங்களில் செயல்பட்டு வரும் தொழிலாளர் நல வாரியங்கள் கலைக்கப்படாது. புதிய சட்டங்களால் இந்த வாரியங்களின் செயல்பாட்டின் மீது எந்த பாதகமான விளைவும் ஏற்படாது.
மாநில அமைப்புசாரா தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்பு வாரியம் தொடர்ந்து செயல்படுவதுடன், பல்வேறு பிரிவினருக்கு தேவையான புதிய சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை வகுக்குமாறு மாநில அரசுக்குப் பரிந்துரை செய்யும் அதிகாரத்தை யும் கொண்டிருக்கும்.
எனவே, தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் அமல்படுத்தப்பட்ட பிறகு, மத்திய மற்றும் மாநில அரசுகளின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்கள் மீது எந்த பாதகமான விளைவும் ஏற்படாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.







