திருவொற்றியூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே ரூ.14 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருவொற்றியூர் மெட்ரோ பணியின்போது, மாணிக்கம் நகர் பிரதான சாலையில் செயல்பட்டு வந்த பேருந்து நிலையம் மற்றும் பணிமனை, அஜாக்ஸ் நகருக்கு மாற்றப்பட்டது. இங்கிருந்து தற்போது பிராட்வே, தாம்பரம், கிளாம்பாக்கம், கோயம்பேடு உட்பட பல்வேறு வழித்தடங்களில் தினமும் 80-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இவற்றில், நாள்தோறும் பல ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர். இருப்பினும், போதிய அளவில் அடிப்படை வசதிகள் இல்லை. மின்சார மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களுக்குச் செல்ல சிரமமாக இருப்பதாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.
இதற்கிடையே, திருவொற்றியூரில் மெட்ரோ ரயில், மாநகரப் பேருந்து வசதியை ஒருங்கிணைக்கும் வகையில், புதிய பேருந்து நிலையத்தை கட்டுவதற்கான ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான நிறுவனம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மெட்ரோ ரயில், மாநகரப் பேருந்து போன்ற பொதுப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தவும், பயணிகள் வருகை அதிகரிக்கவும் ஒருங்கிணைந்த நிலையமாக மாற்றி வருகிறோம். அதன்படி, திருவொற்றியூர் மெட்ரோ அருகே புதிய பேருந்து நிலையம் அமைக்கத் திட்டமிட்டு, ஒப்பந்தப்புள்ளி வெளியிட்டுள்ளோம். தற்போதுள்ள பழைய கட்டிடங்கள், ஷெட்டுகள் அகற்றப்பட்டு, சற்று மேடாக்கி புதிய கட்டிடம் கட்டப்படும்.
பேருந்து நிலையம், பணிமனை ஆகியவை தனித்தனியாக இருக்கும். பேருந்துகள் உள்ளே வந்து செல்ல போதிய சாலைகள், பயணிகளுக்கான இருக்கை, கழிப்பிட வசதி, போதிய வாகன நிறுத்த வசதி ஆகியவற்றை அமைக்க உள்ளோம்.
மெட்ரோ ரயில் நிலையத்துக்குச் செல்ல அடிப்படை வசதிகளும் உருவாக்கப்படும். நிறுவனத்தைத் தேர்வு செய்து விரைவில் பணி ஆணை வழங்கப்படும். அடுத்த 12 மாதங்களில் அனைத்து பணிகளையும் முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.













