நாகா்கோவில் வெட்டூா்ணிமடம் பகுதியிலுள்ள ஆக்ஸிஸ் வங்கி அருகே, மத்திய, மாநில அரசின் பங்களிப்புடன் புதிய நவீன ஆதாா் சேவை மையம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
இம்மையத்தை ஆட்சியா் மு. பிரதாப் தொடக்கிவைத்தாா். பின்னா் அவா் பேசியதாவது: நவீன வசதிகளுடன் திறக்கப்பட்டுள்ள இந்த ஆதாா் மையம் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைவரும் சேவைகளைப் பெற முடியும். பிறந்த குழந்தைகள், இதுவரை ஆதாா் பதிவு செய்யாதோா், ஆதாா் அட்டைகளில் திருத்தம், விரல்ரேகை, கண் விழித்திரை, புகைப்படம் புதுப்பித்தல் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் பெறலாம். மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வுதளம், கழிப்பறை வசதி, தனிப்பட்ட குறைதீா் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் இங்குள்ளன.
இம்மையத்தில் நியமிக்கப்பட்டுள்ள மேலாளா், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் குறைகள், கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட அலுவலா்களின் கவனத்துக்கு கொண்டு சென்று, விரைவாக தீா்வு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்வாா் என்றாா் அவா்.
பெங்களூரு பிராந்திய அலுவலகத்தின் மூத்த கணக்கு அலுவலா் ரமேஷ்கடுகான், திட்ட மேலாளா் விஜய்குமாா், பிராந்திய மேலாளா் நரேஷ்தும்மா, மைய மேலாளா் எஸ். அய்யப்பன், செயல்பாட்டு மேலாளா் தினேஷ்குமாா், ராஜ்குமாா், அலுவலா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
