ஐசிசி டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் உள்ள 2 முறை சாம்பியனான இங்கிலாந்து, கத்துக்குட்டியான நேபாளத்துடன் மோதியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக ஜேக்கப் பெத்தேல் 35 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 55 ரன்களும் கேப்டன் ஹாரி புரூக் 32 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 53 ரன்ளும் சேர்த்தனர். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்தது.
இறுதிக்கட்டத்தில் மட்டையை சுழற்றிய வில் ஜேக்ஸ் 18 பந்துகளில், 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 39 ரன்கள் விளாசினார்.முன்னதாக பில் சால்ட் 1 ரன்னில் நடையை கட்டினார். மற்றொரு தொடக்க வீரரான ஜாஸ் பட்லர் 17 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
டாம் பேன்டன் 2, சேம் கரண் 2 ரன்களில் நடையை கட்டினர். நேபாளம் அணி சார்பில் தீபேந்திர சிங் ஐரி, நந்தன் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். 185 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நேபாளம் அணிக்கு குஷால் புர்தேல் அதிரடி தொடக்கம் கொடுத்தார். இதனால் 3 ஓவர்களில் 31 ரன்கள் விளாசப்பட்டன.
மற்றொரு தொடக்க வீரரான ஆசிஃப் ஷேக் 7 ரன்களில் லியாம் டாவ்சன் பந்தில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய குஷால் புர்தேல் 17 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் எடுத்த நிலையில் வில் ஜேக்ஸ் பந்தில் அவுட் ஆனார். பவர்பிளேவில் நேபாளம் 2 விக்கெட்கள் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்தது.
இதன் பின்னர் கேப்டன் ரோஹித் பவுடெல், தீபேந்திர சிங் ஐரி ஜோடி சீராக ரன்கள் சேர்த்து இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுத்தது. இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் நேபாளம் அணி 12 ஓவர்களில் 101 ரன்கள் குவித்தது. 82 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை சாம் கரண் பிரித்தார்.
தீபேந்திர சிங் ஐரி 29 பந்துகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்த நிலையில் சேம் கரண் பந்தில் ஆட்டமிழந்தார். லியாம் டாவ்சன் வீசிய அடுத்த ஓவரில் ரோஹித் பவுடெல் வெளியேறினார். ரோஹித் பவுடெல் 34 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்தார்.16 ஓவர்களில் நேபாளம் அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது.
அந்த அணியின் வெற்றிக்கு கடைசி 4 ஓவர்களில் 56 ரன்கள் தேவையாக இருந்தன. சாம் கரண் வீசிய 17-வது ஓவரில் லோகேஷ் பாம் 2 பவுண்டரிகளை விளாசினார். இந்த ஓவரில் 10 ரன்கள் சேர்க்கக்கப்பட்டன. ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய அடுத்த ஓவரில் முதல் பந்தை சிக்ஸருக்கு விளாசிய ஆரிஃப் ஷெய்க் அடுத்த பந்தில் விக்கெட் கீப்பர் ஜாஸ்பட்லரிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.
8 பந்துகளை சந்தித்த ஆரிஃப் ஷெய்க் 10 ரன்கள் சேர்த்தார். இதே ஓவரில் லோகேஷ் பாம் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்தினார். இதனால் இந்த ஓவரில் 22 ரன்கள் விளாசப்பட்டன. கடைசி 2 ஓவர்களில் நேபாள அணியின் வெற்றிக்கு 24 ரன்கள் தேவையாக இருந்தது. லூக் வுட் வீசிய 19-வது ஓவரில் முதல் 2 பந்துகளை லோகேஷ் பாம் பவுண்டரிக்கு விரட்டினார். முதல் 5 பந்துகளில் 14 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில் கடைசி பந்தில் குல்ஷன் ஜா (1) போல்டானார்.
இதனால் ஆட்டத்தில் பரபரப்பு அதிகமானது. சாம் கரண் வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் ரன் சேர்க்கப்படாத நிலையில் அடுத்த 2 பந்துகளில் தலா ஒரு ரன் எடுக்கப்பட்டது. இதனால் 3 பந்துகளில் 8 ரன்கள் தேவை என்ற சூழ்நிலை உருவானது. 4-வது பந்தில் லோகேஷ் பாம் 2 ரன்கள் சேர்த்தார். அடுத்த பந்தில் ரன் ஏதும் சேர்க்கப்படவில்லை.
கடைசி பந்தில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சாம் கரண் தாழ்வாக வீசிய புல்டாஸை லோகேஷ் பாம் டீப் கவர்திசையில் அடிக்க ஒரு ரன் மட்டுமே கிடைத்தது. 20 ஓவர்கள் முடிவில் நேபாள அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. லோகேஷ் பாம் 20 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 39 ரன்களும், கரண் ஒரு ரன்னும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இங்கிலாந்து அணி சார்பில் லியாம் டாவ்சன் 2 விக்கெட்களை வீழ்த்தி னார். லூக் வுட், ஜோப்ரா ஆர்ச்சர், வில் ஜேக்ஸ், சாம் கரண் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணிக்கு 2 புள்ளிகள் வழங்கப்பட்டன.
ரன் வேட்டையில் ஜாஸ் பட்லர் 3-வது இடம்
டி20 உலகக் கோப்பை தொடரில் நேபாள அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர், 4 ரன்கள் எடுத்திருந்த போது டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் இலங்கையின் மகேலா ஜெயர்வத்தனேவை (1,016 ரன்கள்) பின்னுக்குத்தள்ளி 3-வது இடத்துக்கு முன்னேறினார்.
36 ஆட்டங்களில் விளையாடி உள்ள ஜாஸ் பட்லர் இதுவரை 1,039 ரன்கள் சேர்த்துள்ளார். இந்த வகை சாதனையில் விரராட் கோலி (1,292), ரோஹித் சர்மா (1,220) ஆகியோர் முதல் இரு இடங்களில் உள்ளனர்.



