Home தேசிய செய்திகள் ஜூன் 21-ல் நீட் மறு தேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

ஜூன் 21-ல் நீட் மறு தேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

0

 வரும் ஜூன் 21-ம் தேதி இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறு நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

முன்னதாக, வினாத்தாள் கசிந்த விவகாரத்தின் எதிரொலியாக நாடு முழுவதும் கடந்த 3-ம் தேதி (மே.3) நடத்தப்பட்ட நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், மறு தேர்வு நடத்தப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இது மாணவர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை உருவாக்கியது.

இந்த நிலையில் வரும் ஜூன் 21-ம் தேதி நீட் மறு தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இந்தத் தகவல் பகிரப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதலோடு ஜூன் 21-ம் தேதி நீட் மறு தேர்வு நடத்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நீட் தேர்வர்களும், பெற்றோர்களும் எந்தவிதமான தகவலுக்கும் அதிகாரப்பூர்வமாக தகவல் பகிரும் ஆதாரங்களை மட்டுமே நம்புமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

மாணவர்கள் மேலதிக விவரங்களுக்கு email at neet-ug@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியையும், 011-40759000, 011-69227700 ஆகிய தொலைபேசி எண்களையும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

தேர்வு ரத்து பின்னணி:

2026- 27-ம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்காக கடந்த மே 3-ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வில் கேட்கப்பட்ட 200 வினாக்களில் 80%-க்கும் கூடுதலான வினாக்கள் தேர்வுக்கு பல நாள்கள் முன்பே ராஜஸ்தானில் வெளியாகி விட்டதாகவும், இது தொடர்பாக அம்மாநில காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரிப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

மருத்துவம் பயிலும் மாணவர்களின் எதிர்காலம் சார்ந்த விஷயத்தில் தேசிய தேர்வு முகமை தொடர்ந்து அலட்சியமாக நடந்து கொள்வதாக அரசியல் கட்சிகளின் விமர்சனங்களும் எழுந்தன.

இந்நிலையில், வினாத்தாள் கசிந்ததால் கடந்த 3-ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், மறு தேர்வு நடத்தப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்தது. அதன்படி மறு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version