நாராயண ஐயர் அல்லது மோதிரம் நாராயணன் – பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 13

0
15

​நாங்​கள் சென்னை ராயப்​பேட்டை அம்​மையப்ப முதலி தெரு​வில் குடி​யிருந்த போது (நான் பொறுப்​பற்​று, ரவுடித்​தன​மாக திரிந்து கொண்​டிருந்த போது) அதே தெரு​வில் குடி​யிருந்​தவர் நாராயண ஐயர் என்​கிற மோதிரம் நாராயணன். நாம் பழகிய சில கதா​பாத்​திரங்​களை வாழ்​வில் மறக்க முடி​யாது.

சிலர் முற்​றி​லும் வித்​தி​யாச​மாக இருப்​பார்​கள். இவர்​கள் ஏன் இப்​படி இருக்​கிறார்​கள்? என்று நமக்கு தோன்​றும். அவர்​களிடம் கேட்​டால், ‘நான் நன்​றாகத்​தான் இருக்​கிறேன். எனக்​கென்ன குறைச்​சல்’ என்​பார்​கள். அது போல்​தான் இவரும். வாரப்​ப​டாத தலை​முடி, ஷேவ் செய்​யப்​ப​டாத முகம், அயர்ன் பண்​ணப்​ப​டாத சட்​டை, அழுக்கோ வெளுப்போ ஏதோ ஒரு வேட்​டி.

ஒரு சாதாரண ஹவாய் செருப்​பு. ஓடி​னால் சத்​தம் கேட்​கிற ஒரு பழங்​கால சைக்​கிள். அதன் இருக்கை நீள​மாக இருக்​கும். அதை அப்​போது ‘ஏரோபிளேன் சீட்’ என்​பார்​கள். அந்த சைக்​கிளில்​தான் அவர் அனைத்து இடங்​களுக்​கும் செல்​வார். திரு​மணம் ஆகாதவர். உறவினர்​கள் என்று சொல்​லிக் கொள்ள யாரும் இல்​லை. சொந்த ஊர், திருநெல்​வேலி பக்​கம் எங்​கேயோ என்று நினைக்​கிறேன்.

அவரும் திரைத்​துறை​யில்​தான் இருந்​தார். டப்​பிங்​கில் சின்ன சின்ன வாய்​ஸ்​களை பேச அவருக்கு வாய்ப்​பு​கள் கிடைக்​கும். அதை பேசி விட்​டு, கிடைக்​கிற சொற்ப வரு​மானத்​தில் வாழ்க்​கையை ஓட்​டிக் கொண்​டிருந்​தார். நான் படிப்பை முடித்​து​விட்டு திரைத்​துறைக்கு டப்​பிங் பேச வந்த காலத்​தில், ஒரு ஸ்டூடியோ​வில் அவரை பார்த்​தேன். அவருக்கு எதிரில் நின்று “வணக்​கம் ” என்​றேன். அவர் என்னை பார்த்​து, “யாரு, பாஸ்​க​ரா?” என்று கேட்​டார். “ஆமாண்​ணா” என்​றேன்.

அவர் “திருந்​திட்​டி​யா​டா?” என்று கேட்​டார். நான் சிரித்​துக் கொண்டு நின்​றேன். அவர் பலரிடம் டப்​பிங் கோ-ஆர்​டினேட்​ட​ராக வேலை பார்த்​தார். அதாவது அந்த காலத்​தில் செல்​போன் வசதி இல்​லாத​தால், சம்​பந்​தப்​பட்ட டப்​பிங் கலைஞர்​களுக்கு புரோக்​கி​ராம் சொல்​லி​விட்டு வரவேண்​டும். அதற்கு அந்த சைக்​கிளில் செல்​வார். சைக்​கிளை எவ்​வளவு மெது​வாக ஓட்ட வேண்​டுமோ, அவ்​வளவு மெது​வாகத்​தான் ஓட்​டு​வார்.

“ஏம்பா 10-ம் தேதி​யில இருந்து ஆரூர்​தாஸ் சார் டப்​பிங்​பா. வந்​திருப்​பா” என்​பார். அவர் ஐயர் என்​றாலும் பிர​மாண பாஷை ஏதும் பேசமாட்​டார். “வீட்​டில் யார் இருக்​கிறாங்​க?” என்​றால், “கல்​யாணம் காட்சி பண்​ணிக்​கல. அது அமையல. அப்​படியே விட்​டாச்​சு. போன கழுதையை தேடறதுக்​கும் ஆளில்ல, வந்த கழுதையை கட்​டுறதுக்​கும் ஆளில்ல” என்​பார்.

இவர்​தான் டப்​பிங் பேசி முடிந்​ததும் அனை​வருக்​கும் ‘கன்​வேயன்​ஸ்’ கொடுப்​பார். அவர்​கிட்ட வேண்​டுமென்றே காலை​யில் போய், “அண்​ணா, கன்​வேயன்ஸ் ப்ளீஸ்” என்று கேட்​பேன். அவரும் “ஷெல் வெயிட் ஆன்” என்​பார். அவர் பேசும் ஆங்​கிலம் சரியா தவறா என்று அவருக்​கும் தெரி​யாது. கேட்​கிற எனக்​கும் (அப்​போது) தெரி​யாது.

தின​மும் எல்லா டப்​பிங் ஸ்டூடியோவுக்​கும் செல்​லும் அவர், அங்​கிருப்​பவர்​களுக்கு வணக்​கம் வைப்​பார். அவர்​கள் பதி​லுக்கு வணக்​கம் சொல்ல வேண்​டும் என்று எதிர்​பார்க்க மாட்​டார். நன்​றாக சாப்​பிடு​வார். உடைகள் அழுக்​காக இருந்​தா​லும் உள்​ளம் வெண்​மை​யானவர். “டப்​பிங்ல ஒரு​வார்த்தை பேசி​னாலும் சாப்​பாடு, கன்​வேயன்ஸ் கிடைச்​சுரும். அதனால​தான் போறேன்​டா. சினி​மாவுல நான் இனிமே என்​னத்த சாதிக்​கப் போறேன்? எனக்கு அவ்​வளவுலாம் திறமை கிடை​யாது​டா” என்​பார்.

தான் பெரிய ஆளாக வரவில்​லையே என்ற வருத்​தம் அவருக்கு கொஞ்​ச​மும் இல்​லை. ஆனால் என்னை “நீ நல்லா வரு​வடா பாஸ்​க​ரா, நல்லா பேசற​டா, உனக்கு நல்ல எதிர்​காலம் இருக்​கு​டா” என்​பார். டப்​பிங்​கில் நடக்​கும் காமெடி​யான விஷ​யங்​களை அடிக்​கடி பேசி சிரித்​துக் கொள்​வோம்.

அப்​படி ஒரு முறை அவர், ஒரு டப்​பிங் பேச சென்​றார். அந்த காலத்​தில் படங்​களுக்கு அதி​கம் டப்​பிங் வேலை இருக்​காது. ஏதாவது ஒரு போர்​ஷன் மட்​டும் டப் பண்​ணு​வார்​கள். இவர் ஒரு வரலாற்று படத்​துக்கு பேசப் போனார். போனதும், ஒரு சிப்​பாய்க்​குப் பேசச் சொன்​னார்​கள்.

படத்​தில் மன்​னன் சிப்​பாய்​களைப் பார்த்து கேள்விக் கேட்​கிறான், “நீங்​கள் என்ன செய்​தீர்​கள்?” என்​று. அதற்கு சிப்​பாய் தலை​வன், ‘ஆர்​வார் செய்​தரமனகி திவி​கினதோம்’ என்று ஒன்​றும் புரி​யாமல் ஏதோ ஒரு மொழி​யில் பேசி​யிருக்​கிறான். அவர் அசிஸ்​டென்ட் டைரக்​டரிடம், “சார், நான் சிப்​பாய்க்​குத்​தான பேசணும். அப்ப அந்த காட்​சிக்கு ஏன் அவர் ஜதி சொல்​லி​யிருக்​காரு” என்று கேட்​டார். “அது ஜதி இல்​லை, எங்க விதி. ஒரு இந்​திக்​காரரை கொண்டு வந்​தாங்க.

அவரு இப்​படி பேசி​யிருக்​காரு” என்று சொன்​னார் அவர். பிறகு அவர் பேச வேண்​டியதைக் கேட்​டார், ‘‘அதில் ஆரவாரம் செய்​தோம், அரண்​மனைக்கு தீ வைக்க நினைத்​தோம்” என்று இருந்​தது. அதைத்​தான் அந்த இந்​திக்​காரர் புரி​யாமல் பேசி​யிருந்​தார். அதைக் கேட்டு நாங்​கள் சிரித்​தோம். பொடி போடும் பழக்​கம் கொண்ட அவர், எப்​போ​தாவது யாராவது வாங்​கிக்​கொடுத்​தால், ஒரு பெக் மது குடிப்​பார்.

அப்​பாவி மனிதர். இவருக்கு பல நாடக நடிகர்​கள் தொடர்பு உண்​டு. திடீரென்று பத்து நாள் அவரை பார்க்க முடி​யாது. நாடகக் குழு​வுடன் சென்று விடு​வார். அவர் ஆருர்​தாஸ் ஐயா யூனிட்​டில் இருந்​த​போது, நாங்​கள் ‘டப்​பிங் ஆர்​டிஸ்ட்​டு​கள்’ எல்​லோரும் சேர்ந்து பணம் போட்டு அவருக்கு புது சைக்​கிள் வாங்​கிக் கொடுத்​தோம். ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்கு நான்​தான் அந்த சைக்​கிளை பாரிஸ் கார்​னரில் போய் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்​தேன்.

இவருக்கு ஏன் மோதிரம் நாராயணன் என்று பெயர் வந்​தது என்​றால், பத்து விரல்​களி​லும் அவர் மோதிரம் போட்​டிருப்​பார். வித​வித​மான கற்​கள் வைத்த மோதிரம் அவை. கட்டை விரலில் கூட மோதிரம் போட்​டிருப்​பவர் அவராகத்​தான் இருப்​பார். அதனால்​தான் அவரை மோதிரம் நாராயணன் என்​பார்​கள். இது​போன்ற கலர் கலர் கற்​களால் தனக்கு அதிர்​ஷ்டம் வரும் என்று நம்​பிய அப்​பாவி அவர்.

ஒரு முறை வரலாற்று படம் ஒன்​றில் ஒரு ராஜாவுக்கு டப்​பிங் பேசச் சொல்​லி​யிருக்​கிறார்​கள். ராஜா வயதானவர். அவரது “யாரங்​கே?” என்ற ஒரு வசனத்தை பேசி​விட்​டார். அடுத்த வசனத்தை ராஜா நிறைய பேசவேண்​டும். இவருக்கு பேச வரவில்​லை. அப்​போது கே.ஏ.​வி.கோ​விந்​தன் என்ற ரைட்​டர் இருந்​தார். அவர் “பேசுங்க பேசுங்க” என்று சொன்​னாலும் இவருக்கு வரவில்​லை. “என்​னங்க நீங்க ராஜாவை விடநிறைய மோதிரம் போட்​டிருக்​கீங்க. ஆனா, பேச மாட்​டேங்​கிறீங்​களே?” என்​றார்.

அப்​படிப்​பட்​ட​வர், ஒரு நாள் திடீரென தவறிட்​டார் என்று தகவல் வந்​தது. அவர் வீட்​டுக்​குப் போனோம். அவர் கதவைப் பூட்​டி​விட்டு வெளியே கிளம்​பும்​போது, “தண்​ணீர் மோட்​டார் போட்​டோமே, ஆஃப் பண்​ணலை​யே” என்று தோன்​றி​யிருக்​கிறது.

போய் அதன் சுவிட்சை அணைத்​து​விட்​டு, “டேங்​கில் தண்ணி எவ்​வளவு ஏறி​யிருக்​குன்​னு செக்​ பண்​ணுவோம்​” என்று பைப் வழி​யாக டேங்​குக்கு ஏறி​யிருக்​கிறார். அப்​போது பைப் வழுக்​கிய​தில் கீழே விழுந்து பின் தலை​யில்​ அடிபட்​டு இறந்​து விட்​டார்​. நான்​ போய்​ கதறினேன்​. இப்​போது நினை​வு​களாகத்​ தங்​கி விட்​ட இவர்​களோடு பழகியதெல்​லாம்​ என்​ ​பாக்​கியம்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here