கலைவாணர் அரங்க வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் புதுப்பிக்கப்பட்ட சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைக்கிறார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் ஆகிய ‘என்.எஸ்.கே’ 1908-ம் ஆண்டு பிறந்தார். 1940, 1950-களில் தமிழ்த் திரையுலகின் மிகச் சிறந்த நகைச்சுவை நடிகர், பாடகர், நாடகத் தயாரிப்பாளர், சினிமா தயாரிப்பாளர் என்றெல்லாம் புகழுடன் விளங்கியவர்.
ஜி.என்.செட்டி சாலை – திருமலைப் பிள்ளை சாலை சந்திப்பில் அண்ணாவால் திறக்கப்பட்ட கலைவாணர் சிலை 1999-ம் ஆண்டில் மேம்பாலம் கட்டப்பட்டபோது சாலை ஓரத்தில் இடம் மாற்றி அமைக்கப்பட்டது.
இவ்விடத்தில் உள்ள சிலையை கலைவாணர் அரங்க வளாகத்தினுள் மாற்றியமைக்குமாறு அவரது குடும்பத்தினர் அரசிடம் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி, கலைவாணர் அரங்க வளாகத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் திருவுருவச் சிலையை இன்று (பிப்.5) காலை 10 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.



