ஹோலி பண்டிகை நாளில் வீட்டிலேயே இருக்குமாறு முஸ்லிம்களை பாஜக எம்எல்ஏ ஒருவர் கேட்டுக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிஹாரின் மதுபானி மாவட்டம் பிஸ்ஃபி தொகுதி எம்எல்ஏ ஹரிபூஷன் தாக்கூர் பச்சோல். பாஜகவை சேர்ந்த இவர் முஸ்லிம்களுக்கு ஒரு கோரிக்கை வைத்தார். இதுகுறித்து அவர் கூறும்போது, “ஆண்டுக்கு 52 வெள்ளிக்கிழமைகள் வருகின்றன. இதில் ஒரு வெள்ளிக்கிழமையில் ஹோலி பண்டிகை வருகிறது. அன்று இந்துக்கள் ஹோலி பண்டிகையை கொண்டாட முஸ்லிம்கள் அனுமதிக்க வேண்டும். தங்கள் மீது வண்ணங்கள் பூசப்பட்டால் முஸ்லிம்கள் கோபப்படக்கூடாது. அவர்களுக்கு இதனை பிரச்சினையாக கருதினால் வீட்டிலேயே இருக்க வேண்டும். சமூக நல்லிணக்கத்தை பேணுவதற்கு இது அவசியம்” என்றார். அவரது இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், “ஹோலி பண்டிகை நாளில் வெளியே வர வேண்டாம் என்று முஸ்லிம் சகோதரர்களை பாஜக எம்எல்ஏ பச்சோல் கேட்டுக்கொண்டுள்ளார். அவர் யார், அவர் எப்படி இதுபோன்ற விஷயங்களை சொல்ல முடியும்? முதல்வர் எங்கே? பச்சோலை தண்டிக்க முதல்வருக்கு தைரியம் இருக்கிறதா? இது ராமர் மற்றும் ரஹீம் மீது நம்பிக்கை கொண்ட நாடு. இது பிஹார். இங்கு 5 முதல் 6 இந்துக்கள் ஒரு முஸ்லிம் சகோதரனை பாதுகாப்பார்கள் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.
காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் சங்கர் கூறும்போது, “இந்த நாடு அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் இயங்குகிறது, எனவே இதுபோன்ற விஷயங்களை அவர்கள் பேசக்கூடாது. பச்சோல் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.














