சட்டத்தை மதித்து தீபம் ஏற்றாமல் பக்தர்களின் உணர்வுகளுடன் ஆட்சியாளர்கள் விளையாடிவிட்டனர் என்று திருப்பரங்குன்றத்தில் நேற்று திரண்ட பக்தர்கள், இந்து அமைப்பினர் வேதனை தெரிவித்தனர்.
பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம.ஸ்ரீனிவாசன்: அயோத்திக்காக 400 ஆண்டுகள் போராடி வெற்றி பெற்றோம். திருப்பரங்குன்றத்தில் தீபத்தூணில் தீபம் ஏற்ற 40 ஆண்டுகளாக போராடுகிறோம். இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் சரி, தீபம் நிச்சயம் ஏற்றியே தீருவோம். கடந்த ஆண்டு தீபத்தூணில் தீபம் ஏற்றாத திமுக தற்போது ஆட்சியில் இல்லை. இந்தாண்டு தீபம் ஏற்றாத தவெக அடுத்தாண்டு ஆட்சியில் இருக்காது. முருகப்பெருமான் அதை செய்து முடிப்பார்.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மனுதாரரான வழக்கறிஞர் கே.கே.ரமேஷ்: நாளை காலை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வோம். நாளை மாலையே ராணுவப் பாதுகாப்போடு வந்து தீபம் ஏற்றுவோம். அதிகாரிகள் மீது கடுமையான தண்டனைகள் பாயும். நீதித் துறையையே ஏமாற்றும் இந்தச் செயலை யாராலும் ஏற்க முடியாது.
சுபாஷினி (திருப்பரங்குன்றம்): தீபத்தூணில் தீபம் ஏற்றுவதைப் பார்க்க குடும்பத்தோடு வந்திருந்தோம். ஆனால், போலீஸாரை குவித்து பக்தர்களை பயமுறுத்தி கோயில் பகுதிக்கு வரவிடாமல் செய்தனர். அவர்களை மீறித்தான் நாங்கள் கோயில் பகுதிக்கு வந்தோம். கடந்த ஆண்டைப்போல், இந்த ஆண்டும் திட்டமிட்டு தீபத்தூணில் தீபம் ஏற்றாமல் ஏமாற்றிவிட்டனர். கோயில் விஷயத்தில் அரசியல் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ராஜசேகரன் (பரமக்குடி): தவெக அரசு சட்டத்தை மதிக்கவில்லை. பக்தர்கள் உணர்வுகளுடன் விளையாடிவிட்டது. கோயில் விவகாரத்தில் அரசியல் செய்வது வெட்கக்கேடானது. யாரை திருப்திப்படுத்த இந்த முடிவு எடுத்தார்கள். அனைத்துத் தரப்பினருக்கான ஆட்சியாக இந்த ஆட்சி இல்லை. அரசை நடத்த முடியவில்லை என்றால் வெளியேறிவிடுங்கள்.
பத்மகிரீசன் (அம்பாசமுத்திரம்): உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டிருந்ததால், கண்டிப்பாக தீபத்தூணில் தீபம் ஏற்றப்படும் என நம்பிக்கையுடன் குடும்பத்தோடு பார்க்க வந்தோம். ஆனால், பக்தர்கள் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காமல் இந்து விரோத செயலில் இந்த அரசு ஈடுபட்டுள்ளது. பதவிப் பிரமாணம் செய்யும்போது அனைத்துத் தரப்பினருக்குமான அரசாகத்தான் செயல்படுவோம் என உறுதிமொழி எடுத்தனர். ஆனால், கொடுத்த உறுதிமொழியையும், நீதிமன்ற உத்தரவையும் ஆளும் அரசே நிராகரித்துள்ளது.
நித்யா (மதுரை ஹார்விபட்டி): திருப்பரங்குன்றத்தில் இவ்வளவு பெரிய பிரச்சினை நடந்து கொண்டிருக்கும் நிலையில் எங்கள் ஊர் எம்எல்ஏவும், அமைச்சருமான நிர்மல்குமாரை காணவில்லை. அவர் எங்கு இருக்கிறார் என தெரியவில்லை. மதநல்லிணக்கத்தை நிலைநாட்டுவதாகக் கூறி மக்களை ஏமாற்றுகிறார்கள். கடந்த முறை தீபத்தூணில் தீபம் ஏற்றாததாலேயே மதுரையிலுள்ள 9 தொகுதிகளிலும் திமுக தோல்வியடைந்தது. இனிவரும் தேர்தல்களில் அனைத்துத் தொகுதிகளிலும் தவெக தோல்வியடையும்.
