ஜூன் 22-ல் மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் அறுபடை வீடுகளின் மாதிரியை அமைத்து, 5 லட்சம் பக்தர்களைத் திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை சுற்றுச் சாலையில் உள்ள அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் வரும் ஜூன் 22-ம் தேதி நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கான பூமி பூஜை விழா இன்று நடைபெறுகிறது. இதில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
இந்த மாநாட்டை பிரம்மாண்டமான முறையில் நடத்த இந்து முன்னணி, பாஜக முடிவு செய்துள்ளன. மாநாட்டில் பங்கேற்க உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முருக பக்தர்கள் மாநாட்டுக்கு தமிழகம் முழுவதுமிருந்து 5 லட்சம் பேரைத் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு வருவோரை கவர்வதற்காக முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரிகள் அமைக்கப்படுகின்றன. அவற்றில் வழிபாடு நடத்தி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
மாநாட்டுக்கு பக்தர்களை திரட்டும் பணி பாஜகவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, முருக பக்தர்கள் மாநாட்டுக்கு மக்களை அதிகளவில் அழைத்து வருமாறு கேட்டுக்கொண்டு வருகிறார். மேலும், வரும் 1-ம் தேதி முதல் பாஜகவினர் தமிழகம் முழுவதும் வீடு வீடாகச் சென்று, முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுக்க உள்ளனர்.
இதுகுறித்து பாஜகவினர் கூறும்போது, “முருக பக்தர்கள் மாநாட்டை இந்து முன்னணி நடத்தினாலும், அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று நடத்துவது பாஜக தலைவர்கள்தான். முருக பக்தர்கள் மாநாட்டை வெகு விமரிசையாக நடத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது” என்றனர்.














