2-வது முறையாக பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ்: டெல்லிக்கு ஹார்ட்பிரேக் | WPL 2025

0
125

நடப்பு மகளிர் ப்ரீமியர் லீக் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இரண்டாவது முறையாக அந்த அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அதே நேரத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி மூன்றாவது முறையாக இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவி உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி மகளிர் ப்ரீமியர் லீகின் மூன்றாவது சீசன் தொடங்கியது. இதில் டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, உபி வாரியர்ஸ் உள்ளிட்ட 5 அணிகள் பங்கேற்றன. இதில் டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடின. இதில் மும்பை வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நேற்று (மார்ச் 15) மும்பையில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது.

150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை டெல்லி விரட்டியது. டெல்லி தரப்பில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் (30 ரன்கள்), மரிசான் கேப் (40 ரன்கள்), நிகி பிரசாத் (25 ரன்கள்) எடுத்தனர். அவர்களை தவிர மற்ற வீராங்கனைகள் ரன் சேர்க்க தடுமாறினர். 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 141 ரன்கள் மட்டுமே எடுத்தது டெல்லி அணி. இதன் மூலம் 8 ரன்களில் மும்பை வெற்றி பெற்றது.

இதுவரை நடைபெற்ற மூன்று சீசன்களில் மூன்று முறை இறுதிப் போட்டிக்கு டெல்லி அணி முன்னேறியுள்ளது. இருப்பினும் அந்த அணி கோப்பை வெல்லும் வாய்ப்பை நெருங்கி வந்து இழந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here